வாரணாசி:வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத் துக்குள், 'வீடியோ' பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி, நேற்று துவங்கியது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. மேலும், அறிக்கையை ௧௭ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இந்நிலையில், மசூதியில் கள ஆய்வு பணி நேற்று துவங்கியது.
ஐந்து பேர் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வை மனுதாரர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர். ஆய்வு பணி நடப்பதையடுத்து, மசூதியிலிருந்து 1 கிலோ மீட்டர் துாரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆய்வு பணி இன்றும் நடக்கிறது. இதற்கிடையே, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE