'ஆபீஸ் லட்சணம் நல்லா தெரியுது!'
திருப்பூர் வணிக வரித்துறை அலுவலகத்தில், வரிநிலுவையில்லா சான்றிதழ் கொடுக்க, 9 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற, வணிக வரி அலுவலர் ஜெய்கணேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் பரவியதும், லஞ்ச அலுவலரை படம் பிடிக்க, பத்திரிகை போட்டோகிராபர்கள் அலுவலக வளாகத்தில் குவிந்தனர். அலுவலகத்தில் உள்ள சில பெண் ஊழியர்கள், 'அவரோட போட்டோவையோ, செய்தியையோ போடாதீங்க. உங்க சொந்த பையனை போல நினைத்துக்கோங்க' என்று கெஞ்சினர்.
இருப்பினும், போட்டோகிராபர்கள் அங்கேயே இருந்ததால், போலீசாரிடம் கூறி, அவர்களை வெளியே அனுப்பி, அலுவலக கதவை அடைத்தனர். அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர், 'லஞ்ச அதிகாரிக்கு, பெண் ஊழியர்கள் உட்பட ஒட்டு மொத்த அலுவலகமும் ஆதரவாக இருக்கும் போதே, இந்த ஆபீசோட லட்சணம் நல்லா தெரியுது...' என்று புலம்ப, பத்திரிகையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு புறப்பட்டனர்.
'தோழர்களை வம்புக்கு இழுக்கிறார்!'
தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த, மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன், 'சன்னியாச தர்மங்களை ஆதீனங்கள் முறையாக பின்பற்றுகின்றனரா... ஆதீனங்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிட வேண்டும்; அதை செய்கின்றனரா?' என்று, கேள்வி எழுப்பி இருந்தார்.இதுகுறித்து, மதுரை ஆதீனத்திடம் நிருபர்கள் கேட்ட போது, 'மடத்தில் எல்லாருக்கும் சமைக்கும் உணவையே நானும் சாப்பிடுவேன். வெளியே
செல்லும் போது, யார் உணவு கொடுத்தாலும், அதை பிச்சையாக கருதி சாப்பிடுவேன்' என்றவர், 'இதை யார் கேட்டது' என்று கேட்க, 'எம்.பி., வெங்கடேசன்' என, நிருபர்கள் கூறினர்.'அவர் எந்தக் கட்சி' என்று ஆதீனம் கேட்க, 'கம்யூனிஸ்ட்' என நிருபர்கள் கூற, 'அவங்களா... என்ன வேணாலும் பேசுவாங்களே...' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'சாமி, சர்ச்சைக்கு பேர் பெற்றவராச்சே... எப்படி தோழர்களை வம்பிழுக்கிறாரு பாருங்க...' என 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.
'எப்பவும் இது வழக்கம் தானே!'
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மாநில பொதுச்செயலர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.செல்வம் பேசுகையில், 'பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்து, தற்போது அதை நிறைவேற்ற மறுக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, அரசு ஊழியர் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர்
ஸ்டாலின், 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என, வாக்குறுதி அளித்தார். ஆனால், எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை' என்றார். மேலும், வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, தேதி வாரியாக நடத்த உள்ள போராட்டங்கள் குறித்தும், அவர் அறிவித்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும், வாக்குறுதிகளை அள்ளி வீசுறதும், அரசு ஊழியர்கள் என்றாலே போராட்டம் நடத்துவதும் எப்பவும் வழக்கம் தானே... இது என்ன புதுசா?' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் அதை
ஆமோதித்து சிரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE