நாகரிகம் இல்லையே!
'என்னை இப்படி அவமானப்படுத்துவது நியாயமா...' என்று கொதிக்கிறார், பிரபல நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான ரம்யா.இவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர். தமிழ் திரைப்பட ரசிகர்கள், 'குத்து' ரம்யா என, இவரை செல்லமாக அழைப்பர். நடிப்பில் பிரபலமாக இருந்தபோதே, கர்நாடகா மாநிலம் மாண்டியா லோக்சபா தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியின் மேலிட தலைவர்களிடம் பிரபலமானதால்,
தகவல் தொழில்நுட்ப அணியிலும் இடம் பெற்றார். அதன்பின், கோஷ்டி அரசியல் காரணமாக, கர்நாடகா காங்கிரசிலிருந்து ரம்யா ஓரம் கட்டப்பட்டார். அவரும், அதை பொருட்படுத்தவில்லை. சில ஆண்டுகளாக அரசியல் வெளிச்சத்தில் இருந்து காணாமல் போயிருந்த ரம்யா, தற்போது மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். கர்நாடகா மாநில காங்., தலைவர் சிவகுமாரை விமர்சித்து, இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு, அங்குள்ள காங்., நிர்வாகிகளை கொதிப்படையச் செய்துள்ளது. 'கட்சியிலிருந்து, 8 கோடி ரூபாயை மோசடி செய்து, அரசியலை விட்டு ஓட்டம் பிடித்தவர், இப்போது எந்த முகத்துடன் சிவகுமாரை விமர்சிக்கிறார்...' என்று காங்., கட்சியினர் ரம்யாவை வறுத்தெடுக்கின்றனர். 'நடிகை என்பதால், தரக்குறைவாக விமர்சிக்கின்றனர். நானாகவே அரசியலை விட்டு விலகினேன்; மோசடி செய்ததாக பொய் சொல்கின்றனர். அரசியல் நாகரிகம் இல்லாதவர்களிடம், இதுபற்றி பேசிப் பலனில்லை...' என கண்ணீர் வடிக்கிறார், ரம்யா.
ஆட்டம் காட்டும் தேஜஸ்வி!
'சர்ச்சையில் சிக்காமல் இருந்தால் போதும்; இவருக்கு பீஹார் அரசியலில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது...' என்று லாலு பிரசாத் யாதவின் மகனும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.இம்மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ், சிறைக்கு சென்று தற்போது ஜாமினில் வந்துள்ளார்; இனி அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
லாலு சிறை சென்ற போது, தன் இளைய மகன் தேஜஸ்வியிடம் கட்சியின் பொறுப்புகளை கொடுத்தார். கடந்த சட்டசபை தேர்தலில், ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், அதிக தொகுதிகளில், தன் கட்சியை வெற்றி பெற வைத்தார் தேஜஸ்வி.லாலு பிரசாத், நகைச்சுவையான அரசியல்வாதி. அவரிடம் பெரிய அளவில் பக்குவம் கிடையாது. ஆனால், தேஜஸ்வி யாதவ், எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும், அதை பக்குவமாக கையாண்டு வருகிறார்; அவருக்கு, 32 வயது தான் ஆகிறது. 'ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தாவிட்டால், போராட்டம் நடத்துவேன்...' என தேஜஸ்வி யாதவ், சமீபத்தில் அறிவித்தது, முதல்வர் நிதிஷ் குமாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுடன் கூட்டணியில் இருப்பதால், இந்த விவகாரத்தில் நிதிஷ் குமார், பட்டும் படாமலும் பேசி வந்தார்.
தற்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தை தேஜஸ்வி யாதவ் கையில் எடுத்துள்ளதால், 'அரசியலில் பழுத்த பழமான நிதிஷ் குமாருக்கே, இந்த பையன் ஆட்டம் காட்டுகிறானே...' என ஆச்சரியப்படுகின்றனர், பீஹார் அரசியல்வாதிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE