உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில், சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக உற்பத்தி செய்யும் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இந்த இரு நாடுகளில் இருந்து கோதுமை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.
இதனால், சர்வதேச அளவில் கோதுமைக்கான தேவை அதிகரித்துஉள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச அளவில் கோதுமையின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாத நுகர்வு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உள்நாட்டில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கோதுமை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் செய்யப்பட்ட கோதுமை ஏற்றுமதி ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத் தவிர, தங்களுடைய நாட்டின் உணவு பாதுகாப்புக்காக அண்டை நாடுகள் கோரியிருந்தால், அந்த கோதுமையை வழங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, உணவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:அதிகளவில் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடுகளான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் ஏற்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளில் கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளது.கடந்த 2021 - 2022 நிதியாண்டில், 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 700 கோடி கிலோ கோதுமையை இந்தியா ஏற்றுமதி செய்தது. நடப்பு 2022 - 2023 நிதியாண்டில், 1,000 கோடி கிலோ ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.அதையடுத்து, மொராக்கோ, துனீஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்த, வர்த்தகக் குழு அமைக்கப்பட்டது.இந்நிலையில், ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான ரபி பருவத்தில், மே 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசின் மொத்த கொள்முதல், 44 சதவீதம் குறைந்து, 1,620 கோடி கிலோவாக இருந்தது.
கோதுமை ஏற்றுமதிக்கான தடை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் கூறியதாவது:நம் நாட்டில் கோதுமை உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. கொள்முதல் செய்வதில் அரசு தோல்வியடைந்து விட்டது. போதிய அளவு நெல் கொள்முதல் செய்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில அமைச்சர் கூறியுள்ளார். அதன்படி பார்க்கையில், கோதுமை ஏற்றுமதிக்கு தடை தேவையில்லை.மத்திய அரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளுக்கு எதிரானதாகும். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை இது தடுத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE