புதுடில்லி:தலைநகர் டில்லியில் வெயில் சுட்டெரிப்பதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் மிக அதிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
டில்லி நகரில், கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில் அடிக்கிறது. இதனால் அனல் காற்று வீசுகிறது. நேற்று முன்தினம் பீதம்புராவில் 44.7 டிகிரி செல்ஷியஸ், நஜாப்காரில் 46.1; ஜபார்பூர் மற்றும் முங்கேஷ்பூரில் 45.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.இன்று வெயிலின் அளவு அதிகரிக்கும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 1951ம் ஆண்டுக்குப் பின், இந்த ஆண்டு தான் ஏப்ரல் மாதத்தில் டில்லியில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யக்கூடும். எனவே, இம்மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு, 16ம் தேதி வரை அதிக கன மழை கொட்டும். மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால், 'மஞ்சள் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, மே 27ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE