ஸ்ரீநகர்:''வழக்குகள் தேங்குவதை குறைக்க, மனுதாரர்களிடம் பிரச்னைக்கு மாற்று வழியில் தீர்வு காண, மாவட்ட நீதிமன்றங்கள் வலியுறுத்த வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார்.
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், உயர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அடிக்கல்லை நாட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெரும் சுமையாக உள்ளது. வழக்குகள் தேக்கத்தை குறைக்க வேண்டும்.
இதில், மாவட்ட நீதிமன்றங்களுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது. ஏனெனில், மக்கள் பலரும், முதலில் மாவட்ட நீதிமன்றங்களில் தான் மனு தாக்கல் செய்கின்றனர். எனவே, மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர்களிடம் பேசி, பிரச்னைக்கு சட்டப்பூர்வமான மாற்று வழிகளில் தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.மனுதாரர்களுக்கு பணப் பிரச்னைகளும் இருக்கும். அதனால், அவர்களிடம் பேசி, மாற்று வழியில் பிரச்னைகளுக்கு தீர்வு காண வைப்பது எளிது.
அப்படி செய்தால், நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது பெருமளவில் குறையும். வழக்குகள் தேங்குவதால் நீதி வழங்குவதும் தாமதமாகிறது. தாமதப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி, சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்பது உண்மை. சிறப்பான நீதி வழங்குவதில், வழக்கறிஞர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலில் கண்ணியத் துடன் செயல்பட வேண்டும்.நீதி வழங்குவதில், நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.இவ்வாறு ரமணா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE