வாலாஜாபாத், :குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 200 கோடி ரூபாயில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைய உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் நாவலுார் கிராமத்தில், 'டெர்மினல் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்' எனும், காய்கறி ஏற்றுமதி முனையம் துவக்கப்படும் என, 2011ல் தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதன் பின் வந்த, அ.தி.மு.க., அரசு அந்த திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி முனையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இதற்காக, குன்றத்துார் தாலுகா நாவலுார் கிராமத்தில், 35 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேளாண் ஏற்றுமதி முனையம் திட்டப் பணிகள் மேற்கொள்ள, உழவர் களஞ்சியம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் கிடங்கு, காய்கறி சுத்தம் செய்யும் குடோன், தரம்பிரிக்கும் கூடாரம், 'பேக்கிங்' செய்யும் அறை, குளிரூட்டும் அறை என, பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.இதன் வாயிலாக, அப்பகுதியைச் சேர்ந்த 1,000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாகும். தவிர, 5 லட்சம் கிலோ விளை பொருட்களை இருப்பு வைக்கலாம் என, வேளாண் விற்பனை துறை தெரிவித்துள்ளது.காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலுார், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தால் பயன்பெறுவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE