திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை, நாளை முதல் துவங்குகின்றனர்.ஜவுளி உற்பத்தி மூலப்பொருட்களான பருத்தி பஞ்சு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழக நுாற்பாலைகள், கடந்த 18 மாதங்களாக, மாதம்தோறும் தொடர்ந்து நுால் விலையை உயர்த்திவருகின்றன.கடந்த ஏப்., மாதம் கிலோவுக்கு 30 ரூபாய் நுால் விலை உயர்ந்தது; இம்மாதம் மீண்டும் 40 ரூபாய் உயர்த்தப்பட்டது.
அபரிமிதமான நுால் விலை, கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழக ஜவுளி உற்பத்தி துறையை பாதிக்கச் செய்துள்ளது.எனவே, பஞ்சு, நுால் ஏற்றுமதிக்கு தடை, விலையை கட்டுப்படுத்த வேண்டும். யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில், 2 நாள் தமிழக ஜவுளி நகரங்களில் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்குகின்றனர். உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், ரைசிங், பிளீச்சிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, காஜாபட்டன், செக்கிங், அயர்னிங், எலாஸ்டிக், பாலிபேக், அட்டைபெட்டி உற்பத்தி என பின்னலாடை துறை சார்ந்த அனைத்துவகை நிறுவனங்களும், நாளை மற்றும் நாளை மறுநாள் உற்பத்தியை நிறுத்திவைக்கின்றன.இப்போராட்டத்துக்கு திருப்பூர் தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. பின்னலாடை தொழிலாளர்கள், இரண்டு நாட்கள் விடுமுறையில் செல்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE