கோடை விடுமுறையை அடுத்து சுற்றுலா பயணியர் வருகையால், முட்டுக்காடு படகு குழாம் களைகட்டி உள்ளது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில், முட்டுக்காடு படகு குழாம் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவின் உப்பங்கல் பகுதியான இது, அடையாறில் இருந்து 23 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த படகு குழாம், 1984ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு, 3 அடி முதல் ௬ அடி வரை மட்டுமே, நீரின் மட்டம் உள்ளதால், படகு சவாரிக்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. படகில் நீண்ட துாரம் பயணிக்கும் வகையில், பகிங்ஹாம் கால்வாயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பாதை, சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. சுற்றுலா பயணியர் வசதிக்காக, மூங்கிலால் வேயப்பட்ட இல்லமும், உணவகமும் உள்ளன. குடிநீர் வசதி, கழிப்பறை வாகன நிறுத்துமிடமும் உள்ளன.கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக படகு குழாம் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, இந்தாண்டு படகு குழாம் திறக்கப்பட்டது. தற்போது கோடை விடுமுறை என்பதால், பயணியர் வருகை அதிகரித்து முட்டுக்காடு களைகட்டி உள்ளது. இங்கு சிறார் முதல் மூத்த குடிமக்கள் வரை குடும்பத்துடன் உற்சாகமாக பயணம் மேற்கொள்ள, துடுப்பு படகு, இயந்திர படகு, வாட்டர் ஸ்கூட்டர், விரைவு படகு என, 46 படகுகள் உள்ளன. படகு குழாமிற்கு சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்கும் வகையில், 2019ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு அதிவேக வாட்டர் ஸ்கூட்டர் தருவிக்கப்பட்டன. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த வாட்டர் ஸ்கூட்டரில், இருவர் பயணிக்கலாம்.படகுகளை இயக்குவதற்கென, 36 ஓட்டுனர்கள் உள்ளனர். சுற்றுலா பயணியரின் பாதுகாப்பிற்காக, 500 'லைப் ஜாக்கெட்'கள் உள்ளன. விடுமுறை இன்றி அனைத்து நாட்களும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இடைவேளை இன்றி இயங்கும்.குழந்தைகளில் ௫ வயதிற்கு உட்பட்டோருக்கு இலவசமாகவும், அதற்கு மேற்பட்ட வயதினர் அனைவருக்கும் ஒரே கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவருக்கு கல்வி சுற்றுலாவின் போது, சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE