வெயிலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பறவைகள், விலங்குகளுக்கு தண்ணீர், உணவு அளிக்கும் சேவை யில், பல நல்லுள்ளம் கொண்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகள், கால்நடைகளும் நீர் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. வெப்பத்தை தணிக்க தண்ணீர் கிடைக்காமல் பறவைகள் மயங்கி விழுவது, பலியாவது போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன. நாய், பூனை உள்ளிட்ட உயிரினங்களும், தாகம் தணிக்க தண்ணீரைத் தேடும். நல்லுள்ளம் கொண்ட பலரும், இதை உணர்ந்து, நாய், பூனை மற்றும் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து, பழங்கள், தானியங்கள் வைத்து, தாகத்தையும், பசியையும் போக்கி வருகின்றனர்.வீட்டின் மொட்டை மாடியில், நிழல் தரும் பகுதியில் சிறிய பாத்திரம், தேங்காய் மூடி போன்ற பொருட்களில் தண்ணீர் ஊற்றி வைக்கின்றனர். தெரு நாய்களின் தண்ணீர் தேவையை தீர்க்க, வீட்டு வாசல்களில் தண்ணீர் வைக்கின்றனர். இது குறித்து, புளூகிராஸ் அமைப்பின் முதன்மை மேலாளர் வினோத்குமார் கூறியதாவது:மரங்கள், நீர்நிலைகள் அழிப்பு, கட்டடங்கள் வளர்ச்சி போன்ற காரணத்தால், சென்னையில் பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருக்கும் பறவைகளுக்கும் உணவு கிடைப்பது அரிதாக உள்ளது. வீட்டு மாடிகளுக்கு வரும் பறவைகளை துரத்தி விடாமல், இயன்ற அளவு தண்ணீர், உணவு வழங்க வேண்டும். இது தொடர்பாக, முன்பை விட, மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த, ராமு என்பவரும், அவரது குடும்பத்தினர் வீட்டு மாடியில், சிறு சிறு பிளாஸ்டிக் குவளைகளில் தண்ணீர் வைத்து, காகம், அணில், குரங்கு உள்ளிட்ட ஜீவராசிகளின் தாகம் தணித்து வருகின்றனர். இது குறித்து, ராமு கூறியதாவது:முதலில் மண் குவளைகளில் தண்ணீர், அரிசி மற்றும் உணவுகளை வைத்தேன். குரங்குகள், அவற்றை கீழே தள்ளி உடைத்துவிட்டன. அதனால் பிளாஸ்டிக் குவளை பயன்படுத்தினேன். முதலில் நான் இதை துவக்கினாலும், நான் இல்லாத நேரத்திலும், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதைத் தொடர்கின்றனர். பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இந்த மண்ணில் உள்ளன. அத்தனை உயிர்களுக்கும், நம்மால் உதவிட முடியாது. நானும் என் குடும்பத்தாரும் எங்களால் முடிந்ததை, ஒரு கடமையாகவே செய்கிறோம்.இதை மற்றவர்களும் பின்பற்றி, தங்கள் வீட்டு மாடியில், சிறு குவளையில் தண்ணீர், தானியங்கள் வைத்து, உயிரினங்களின் தாகத்துக்கும் பசிக்கும் உதவலாம். இவ்வாறு ராமு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE