கொழும்பு:இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நேற்று நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார்.
இலங்கையில் மக்களின் தீவிர போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரனில் விக்ரமசிங்கேவை புதிய பிரதமராக நியமித்தார். அவர் தலைமையில் அமையும் இடைக்கால அரசுக்கு, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவளிக்கும் எனவும் அறிவித்தார்.
ஆனால் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்க மறுத்து விட்டன.இந்நிலையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று நான்கு அமைச்சர்களை நியமனம் செய்தார். இதில், முந்தைய அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த, ஜி.எல்.பெய்ரிசுக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகத் துறைக்கு தினேஷ் குணவர்த்தனாவும், ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி வாரிய துறைக்கு, பிரசன்னா ரணதுங்கேவும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக காஞ்சனா விஜிசேகரா நியமிக்கப்பட்டுஉள்ளார். நான்கு அமைச்சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசில், 20 அமைச்சர்கள் இடம் பெற உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE