புதுடில்லி: டில்லியில், பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், 20 பசுக்கள் உயிரோடு எரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டில்லி அருகே உள்ள ரோஹினி சவ்தா கிராமத்தில் பால் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள மாட்டுக் கொட்டகையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேகமாக பரவிய தீயில் அங்கு கட்டப்பட்டிருந்த பசுக்கள் சிக்கிக் கொண்டன. பண்ணையாட்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காய்ந்த வைக்கோல் பதர்களில் பற்றிய தீயை சுலபமாக அணைக்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் கட்டுக்கடங்காத தீயை அணைத்தனர். இந்த விபத்தில், 20 பசுக்கள் உயிரோடு எரிந்து கரிக்கட்டைகளாயின. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,யில் அமேதி தொகுதியைச் சேர்ந்த சந்தெரியா கிராமத்தில் அரசு கோசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதை அப்பகுதி பொறுப்பு அதிகாரி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பசுக்களுக்கு போதிய தீவனம் வழங்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பொறுப்பு அதிகாரி அளித்த அறிக்கையின் பேரில் பஞ்சாயத்து வளர்ச்சி உதவி அதிகாரி, தீனதயாள் துபே, சந்தெரியா கிராமத் தலைவர் முகமது துபெல் ஆகியோர் மீது, பிராணி வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமேதி கலெக்டர் ராகேஷ் குமார் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE