திருப்பூர்:முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாததால், ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதியோர்கள், தடையின்றி சென்று, ரேஷன் பொருள் பெற வசதியாக, ஆதார் கைரேகை பதிவுகளை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதன்படி, கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் நேற்று, சிறப்பு முகாம் நடந்தது.
இருப்பினும், முதியோர் நீண்ட தொலைவு பயணிக்க முடியாது என்பதால், நேற்றைய முகாம்களில் கூட்டம் அதிகம் இல்லை.தாலுகா அலுவலகம் மற்றும் நகரப்பகுதியில் உள்ள முதியோர் மட்டும், சிலர் உதவியுடன் நேரில் சென்று, கைரேகைபதிவை புதுப்பித்தனர். மற்றபடி, கிராமப்புற முதியோர்கள், நீண்ட தொலைவு பயணிக்க முடியாததாலும், தெற்கு தாலுகா அலுவலகத்து பஸ் வசதியில்லாததாலும், கை விரல் ரேகை புதுப்பிக்க ஆர்வம் காட்டவில்லை.நேற்றைய சிறப்பு முகாமிலும், கைவிரல் ரேகை, கண் விழிகள் பதிவு 'அப்டேட்' செய்ய, 100 ரூபாயும், இதர திருத்தம் செய்ய, 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மாவட்டத்தில், நடமாடும் ஆதார் 'அப்டேட்' மையத்தை இயக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
கலெக்டர் கருணை காட்டலாமே...
ரேஷன் கடை வாரியாக, கைவிரல் ரேகை பதிவு ஆகாத நபர்களை கண்டறிய முடியும். அவர்களை ஒருங்கிணைத்து, ரேஷன் கடை அல்லது, கூட்டுறவு சங்கம் வாரியாக முகாம் நடத்தி, கைவிரல் ரேகையை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.இரண்டு 'கவுன்டர்' உள்ள மையங்களில் இருந்து, ஒரு நபரை அனுப்பி, ரேஷன் கடைகளில், 'அப்டேட்' செய்ய, கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்பது, நடமாட முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE