ராமநாதபுரம்-இணையதளங்களில் வரும் போலி கடன் ஆப்களில் கடன் பெற விண்ணப்பித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம், என ராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆன்லைன் கடன் ஆப்களில் அவசர தேவைக்காக கடன் வாங்கும் வசதிகள் சுலபமாக இருப்பதால் பொதுமக்கள் ஆன்லைன் கடன் ஆப்களை பயன்படுத்துவது கடந்த ஓராண்டாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இணையதளத்தில் உள்ள பல போலி லோன் ஆப்களின் மூலம் பணத்தை பெறும்போதும், அந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் போது நமது அலைபேசியில் உள்ள அனைத்து தொடர்பு அலைபேசி எண்கள், போட்டோக்கள், மீடியா ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளித்த பிறகே லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்ய முடியும்.அதன் பின் அவரது அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் கார்டு, பான்கார்டை கொடுத்த பிறகே பணம் பெற முடியும். மேலும் வாங்கும் பணத்தில் 30 முதல் 50 சதவீதம் தொகையை வட்டியாக பிடித்தம் செய்த பிறகே மீதி தொகையை கடனாக தருகின்றனர்.குறிப்பிட்ட தேதியில்வாங்கிய பணத்தை இரண்டு மடங்காக செலுத்திய பிறகும் மேலும் அதிக வட்டித்தொகை செலுத்தவில்லை என்றால் நம்மிடம் இருந்து பெற்ற ஆவணங்களை பயன்படுத்தி ஆப் டவுன்லோடு செய்யப்பட்ட அலைபேசியில் உள்ள அத்தனை எண்களுக்கும் நமது புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை அனுப்பி பணம் பெற்றவரின் பெயரைக்கூறி இவர் ஒரு ஏமாற்றுக்காரர். கடன் வாங்கி கட்டாமல் ஏமாற்றுபவர் என்று அவதுாறாக தகவல் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள்.அதன் பிறகும் பணம் செலுத்தாவிட்டால் பணம் பெற்றவரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனைவருக்கும் அனுப்பி மிரட்டுவார்கள். அதன் பின் நியமனதாரரான(நாமினி) லோன் வாங்கியவரின் மனைவி உள்ளிட்டவர்களின் பெயர், அலைபேசி எண்ணை குறிப்பிட்டு பாலியல் தொழில் செய்பவர்கள் என்று சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்புவார்கள். பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுவார்கள்.இதுபோல் கடந்த 2021 மற்றும் 2022ல் மிரட்டல்விடுப்பதாக பொதுமக்களிடமிருந்து 25க்கும் மேற்பட்ட புகார்கள் சைபர் கிரைம் போலீசுக்குவந்துள்ளன. எஸ்.பி., கார்த்திக் உத்தரவின் பேரில் சைபர் கிரை ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதுபோன்ற போலி அப்ளிகேஷன் லோன் ஆப்களை அலைபேசி பிளேஸ்டோரில் சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். இது போல் மேலும் 56 போலி லோன் ஆப்கள் மூலம் மக்கள் மிரட்டப்படுவதும் தெரியவந்துள்ளது.இதுபோல் பாதிக்கப்படுவோர் cybercrime.gov.in என்ற இணையதளத்தில்ஆன்லைனில் புகார் அளிக்கலாம். மேலும் அதிகமாக பணம் கேட்டு மிரட்டினால் 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டால் பண பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்படும்.சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் பணம் இழப்பதை தவிர்க்க தெரியாதவர்களின் போன் அழைப்பு, குறுந்தகவல், லிங், மெயில், யூ.ஆர்,எல்., கே.ஒய்.சி லிங்க், தெரியா அப்டேட் லிங் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்,என சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE