தமிழகத்தில் விரைவில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு முழுவீச்சில் ஆய்வு செய்து வருகிறது.
தினசரி நஷ்டம் எவ்வளவு; அதை சரிகட்ட பஸ் கட்டணத்தை எந்தளவுக்கு உயர்த்தலாம்என்பது குறித்த விபரங்களை, அனைத்து போக்குவரத்து கழகங்களிடம் இருந்து,இக்குழு திரட்டி வருகிறது. அதனடிப்படையில் பஸ் கட்டண உயர்வு குறித்து,அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 19 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.இவற்றின் வாயிலாக, 1.50 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர்.அரசு பஸ்களை இயக்க தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதாந்திர செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, 2021 - 22ம் நிதி ஆண்டில் மட்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 4,44௩ கோடி ரூபாய் கூடுதல் செலவாகி உள்ளது.மேலும், 2732 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் குறைவு
அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் கட்டணம் குறைவாக இருக்கிறது. தமிழக அரசின் சாதாரண கட்டண பஸ்களில், 1 கிலோ மீட்டருக்கு 58 காசு; 'எக்ஸ்பிரஸ்' 75 காசு; 'டீலக்ஸ்' 85 காசு; 'அல்ட்ரா டீலக்ஸ்' 1 ரூபாய்; 'ஏசி' 1.30 ரூபாய்; படுக்கை வசதியுடன் கூடிய, அல்ட்ரா டீலக்ஸ் 1.55 ரூபாய்; படுக்கை வசதியுடன் கூடிய 'ஏசி' பஸ்களில் 2 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில், 1 கிலோ மீட்டருக்கு, 8 முதல் 10 காசு வரையில் குறைவாகும்.போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, அரசு பல்வேறு புதிய முயற்சிகளை எடுக்க உள்ளது.தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி இயக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இதற்கிடையே, அரசு போக்குவரத்து கழகங்களின் இழப்பை சரிகட்ட, பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை வழங்க, புதிய வல்லுனர்கள் குழுவை அரசு சமீபத்தில் அமைத்துள்ளது.இதில், அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், நிதித் துறை, சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை போக்குவரத்து பொறியியல் நிபுணர்கள் உள்ளிட்ட எட்டு பேர்
உள்ளனர்.இந்த குழு, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, அன்றாட செலவு, வருவாய், எரிபொருள் செலவு, மொத்த பயணியர் எண்ணிக்கை, இலவச பயணியர் எண்ணிக்கை, வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி, கட்டண உயர்வு தவிர, மாற்று வழிகளில் வருவாய் பெருக்க உள்ள வாய்ப்புகள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறது. இந்த விபரங்களை சேகரித்து, அதனடிப்படையில் பஸ் கட்டணத்தை உயர்த்தலாமா? அப்படி உயர்த்தினால் எந்தளவுக்கு உயர்த்துவது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது. அதன்படி, பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக, அரசு முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.
நிதி நிலை மோசம்
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:வல்லுனர் குழு அமைத்து, வருவாய், செலவு, வருவாய் பெருக்குவதற்கான வாய்ப்பு குறித்து விபரங்களை கேட்டுள்ளோம். டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளமும் உயர்த்த வேண்டிஉள்ளது. கொரோனாவுக்கு பின், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை மோசமாக இருக்கிறது. சில கழகங்களில் பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க, தமிழக அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. நிதி நிலைமையை சமாளிக்க, ஓரளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த வல்லுனர்கள் குழு அளிக்கும் அறிக்கையை பார்த்த பின், தமிழக அரசு, பஸ் கட்டணம் உயர்வு குறித்து முடிவெடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டீசல் செலவை குறைக்க அரசு பஸ்களில் சி.என்.ஜி., காஸ்? 'அரசு பஸ்களில் டீசல் செலவை குறைக்க, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை பயன்படுத்த முன்வர வேண்டும்' என, தொழில்நுட்ப வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், பலர், பெட்ரோல் பயன்பாட்டு வாகனங்களை, சி.என்.ஜி., காஸ் பயன்பாட்டு வாகனங்களாக மாற்றி வருகின்றனர். இதனால், எரிபொருள் செலவு குறைவதுடன், புகை மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது.தமிழக அரசு, காற்று மாசை குறைக்கும் வகையில், 'பேட்டரி' பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளது. பேட்டரி பஸ்களின் விலை அதிகமாக உள்ளது. இதனால், சி.என்.ஜி., காஸ் பயன்பாட்டில், 'பி.எஸ்., 6' வகை வாகனங்களை கொள்முதல் செய்தால் செலவை குறைக்கலாம் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, ஒப்பந்த முறையில் பஸ்களை இயக்கும் உரிமையாளர்கள், சி.என்.ஜி., காஸ் பயன்படுத்துகின்றனர்.
இதனால், அவர்களுக்கு எரிபொருள் செலவு அதிகளவில் மிச்சமாவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, தனியார் நிறுவன போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த அமுதன் கூறியதாவது:காற்றை விட லேசானது சி.என்.ஜி., காஸ் என்பதால், அதிக சக்தியை வெளியிடும். அதனால், புகை குறைவதோடு, அதிக 'மைலேஜ்' கிடைக்கும். அதேநேரம், 1 லிட்டர் டீசலை விட, 1 கிலோ சி.என்.ஜி., வாயுவின் விலை 50 ரூபாய் வரை குறைவு. இதை, அரசு பஸ்களில் பயன்படுத்த, சி.என்.ஜி., 'கிட்' எனும் கருவி மட்டும் பொருத்தினால் போதும். ஒரு சி.என்.ஜி., கிட் விலை 7.75 லட்சம் ரூபாய். ஒரு பஸ்சை ஒரு நாளைக்கு, 300 கி.மீ., வீதம், சி.என்.ஜி., காசை பயன்படுத்தி இயக்கினால், 2,623 ரூபாய் மிச்சமாகும். அந்த வகையில், 296 நாட்களில், அந்த கருவிக்கான செலவை அடைத்து விடலாம். இதனால், அரசு பஸ்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்
.- நமது நிருபர் -