சென்னை: ''தமிழகத்தில் நடப்பது ரியல் எஸ்டேட் அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியே தவிர, ஏழை மக்களுக்கானதாக தெரியவில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை, ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு என கூறி, தன் வீட்டை இடித்ததை கண்டித்து, கண்ணையன் என்பவர் சமீபத்தில் தீக்குளித்து இறந்தார். அவரின் குடும்பத்தினரை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடவடிக்கை
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ஆதரவாக, ஏழை மக்கள் வசிக்கும் வீடுகளை, அரசு அவசரகதியில் இடித்துள்ளது. அந்த இடத்தில் வசிப்போருக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனால், அவசர கதியில் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர்களை வைத்தே, வீடுகளை அரசு இடித்துள்ளது. அங்கு வசித்த மக்களை, சென்னைக்குள் அகதிகளாக மாற்றி விட்டு, திராவிட மாடல் அரசு என்று, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
எனவே, அங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று, அவர் வழியாக தலைமை செயலரிடம் விளக்கம் கேட்கப்படும்.நீர் நிலைகளில் குடியிருப்புகள் கட்டும் பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. சாதாரண மக்கள் மீது அதிகாரத்தை ஏவி நடவடிக்கை எடுக்கின்றனர்.
குளறுபடி
இது, ரியல் எஸ்டேட் அதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நடக்க கூடிய ஆட்சியே தவிர, ஏழை மக்களுக்கான ஆட்சியாக தெரியவில்லை. இந்த விவகாரத்தில் பல குளறுபடி நடந்திருப்பதால், தனி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். பா.ஜ., நடத்திய போராட்டத்தால் தான், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, கருணாநிதி பெயர் வைக்க போவதில்லை என்று, அமைச்சர் நேரு கூறுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
'தமிழக அரசின் நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:மத்திய அரசின் திட்டங்களை தன் சொந்த மாநில மக்களுக்கு கொடுப்பதற்கு கூட, தன்னை தானே, 'நம்பர் ஒன்' என்று கூறி கொள்ளும் ஒரு முதல்வர், 'கமிஷன், கரெப்ஷன், கலெக் ஷன்' என்ற தன் திராவிட மாடலை தொடர வேண்டும்.மாநில அரசின் நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மிக விரைவில் இதுபோன்ற தவறுகளை, மேலும் நடக்காமல் தடுத்து, வலிமையான முன்னுதாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.ஊழலையும், லஞ்சத்தையும் எதிர்த்து, அதனால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவியும், மாநில அரசு பணியும் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அளித்த பேட்டி: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, கருணாநிதி பெயர் வைக்கும் நகராட்சி தீர்மானத்தை நிறுத்தி வைக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது கூட தெரியாமல், பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். அவர் கூறியபடி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால், அவர் மீது வழக்கு பாயும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE