மானாமதுரை--மானாமதுரை அருகே கல்குறிச்சி வைகை ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்,அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி, கரிசல்குளம் கிராமங்களை ஒட்டிய வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மானாமதுரை ரயில்வே மேம்பால பகுதியில் இருந்து வைகை ஆற்றுக்குள் பாதை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றுவந்தது.இந்நிலையில் கல்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வைகை ஆற்றுக்குள் போராட்டம் நடத்தினர்.பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மண் அள்ளும் இயந்திரங்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.அனைத்து விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ராமமுருகன் கூறுகையில், கல்குறிச்சி, கரிசல்குளம் வைகை ஆற்றுபகுதியில் தடுப்பணை அமைப்பதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்க உள்ள நிலையில் அப்பகுதியிலேயே மணல் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது ஏமாற்றமளிக்கிறது. இப்பகுதியில் 72க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள், மானாமதுரை நகராட்சி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மணல் குவாரி அமைத்தால் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE