மதுராந்தகம்:'டிக்கெட்' எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், 'போதை' பயணி தாக்கியதில் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார். பணியின்போது மரணமடைந்த நடத்துனருக்கு, முதலமைச்சர் நிவாரண நிதி 10 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டது.
சென்னை கோயம்பேடில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பேருந்து, நேற்று காலை சென்று கொண்டிருந்தது.பேருந்தில் கள்ளக்குறிச்சி வ.உ.சி., தெருவைச் சேர்ந்த தாவுபிள்ளை மகன் பெருமாள், 56, நடத்துனராக பணிபுரிந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நிறுத்தத்தில் ஏறிய, சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன், 38, என்பவர், 'டிக்கெட்' எடுக்காமல் பயணம் செய்தார். இது குறித்து நடத்துனர் கேட்டபோது, போதையில் இருந்த முருகன், நடத்துனரிடம் தகராறு செய்தார்.வாக்குவாதம் முற்றி, முருகன் தாக்கியதில், நடத்துனர் மயங்கி விழுந்தார். பின், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து, முருகன் தப்பினார்.
உடனடியாக மேல்மருவத்துாரில், தனியார் மருத்துவமனைக்கு நடத்துனர் பெருமாளை சேர்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.
பேருந்து பயணி தாக்கி, நடத்துனர் பெருமாள் இறந்ததை அடுத்து, அவரது குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் அறிவித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன், நடத்துனர் பெருமாளின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் காசோலையை நேற்று மாலை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE