உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
எஸ்.செபஸ்டின், சிவகாசி,விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, சூசகமாக தெரிவித்து விட்டார், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்.

தேர்தல் நேரத்தில் எதை எதையோ சொல்லி ஆட்சியில் அமர்ந்து விட்டோம்; இனி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் என்ன... நிறைவேற்றாவிட்டால் என்ன... என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பது,இந்த அறிவிப்பின் வாயிலாக தெரிகிறது.
அரசு ஊழியர்கள் தான், அரசின் ஆணிவேர் போன்றவர்கள். எனவே, ஆணிவேருக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால், அரசு என்ற மரத்தின் நிலை என்னவாகும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றன, அரசு ஊழியர்களின் சங்கங்கள்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராகவும், அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர் ஸ்டாலின். பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த முடியுமா... அதற்கு மாநில அரசின் நிதி நிலைமை ஒத்துழைக்குமா என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும்,

அரசு ஊழியர்களின் ஓட்டுகளை கவர்வதற்காக, தேர்தல்நேரத்தில் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். இப்போது, அவற்றை நிறைவேற்ற முடியாமல், கண்விழி பிதுங்கி நிற்கிறார். 'கெட்டிக்காரரின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு தான் செல்லும்...' என்ற, எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல் வரிகளை தான், ஸ்டாலின் அரசின் அறிவிப்பு நினைவுபடுத்துகிறது.
அரசு ஊழியர்களும், பொதுமக்களும், இவர்களின் பொய்களை இனியாவது நம்பாமல் இருந்தால் சரி தான்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE