அன்னூர்:தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் தொடர்பான, மூன்று நாள் கருத்து கேட்பு கூட்டம் நிறைவு பெற்றது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, ஈரோடு மாவட்டம், பண்ணாரி அடுத்த கர்நாடக எல்லை வரை, சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.இதற்காக சர்க்கார் சாமக்குளம், அன்னூர் பேரூராட்சிகள் மற்றும் 10 ஊராட்சிகளில், 454 பேரின் 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆட்சேபணை தெரிவித்த கோவை மாவட்டத்தை சேர்ந்த, 344 பேரிடம் கருத்து கேட்கும் கூட்டம், அன்னூர் ஒன்றியத்தில் மூன்று நாட்களாக நடந்தது. நேற்று முடிவடைந்தது. நேற்று ஒட்டர்பாளையம் மற்றும் கெம்பநாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சிறப்பு தாசில்தார் உமா பரமேஸ்வரி தலைமையில் அதிகாரிகள், பட்டாதாரர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். பெரும்பாலான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை தர விருப்பமில்லை என தெரிவித்தனர். சிறப்பு தாசில்தார் உமா பரமேஸ்வரி கூறுகையில், "நோட்டீஸ் வழங்கப்பட்ட 344 பேரில், 250 பேர் ஆஜராகி தங்கள் வாக்குமூலத்தை தெரிவித்தனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்கு மூலம், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்," என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE