தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட இளம்பெண் ஒருவர், தினமும் 1,500 ரூபாய் செலவு செய்து, ஆக்சிஜன் செறிவூட்டி வாயிலாக சுவாசித்து வருகிறார்.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு, மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா, 19; இவருக்கு ஒரு வயதான போது, பெற்றோர் இறந்து விட்டனர்.பெரியப்பா கூத்தபெருமாள் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு, பிளஸ் 2 படிப்பை முடித்த போது, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, முதுகு தண்டு வடம் வளைந்ததால், நுரையீரல் சுருங்கி விட்டதாகவும், மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும் என்றும், 24 மணி நேரமும் ஆக்சிஜன் இருந்தால் தான் உயிர் வாழ முடியும் என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.சுவேதா உறவினர்கள், தினமும் 1,500 ரூபாய் செலவு செய்து, ஆக்சிஜன் செறிவூட்டியை வாடகைக்கு எடுத்து, சுவாசிக்க ஏற்பாடு செய்தனர்.
சுவேதாவின் உறவினர் சுதா கூறியதாவது:முன்பணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்தி, தினமும் 1,500 ரூபாய் வாடகைக்கு, ஆக்சிஜன் செறிவூட்டியை வாங்கி, சுவேதா சுவாசிக்க ஏற்பாடு செய்துள்ளோம். செறிவூட்டி வாயிலாக தான், அவர் உயிர் வாழ்ந்து வருகிறார். ஒன்றரை ஆண்டாக, தெரிந்தவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி, காப்பாற்றி வருகிறோம். அரசு உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சுவேதா கூறியதாவது:ஒன்றரை ஆண்டுகளாக ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரம் உதவியோடு சுவாசித்து வருகிறேன். பெரியப்பா குடும்பத்தினர், என்னால் பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லக்கூட போதிய பணவசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனக்குரிய சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுவேதாவுக்கு உதவ விரும்புவோர் 91597 18098 என்ற எண்ணில் உறவினர் சுதாகரை தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE