தஞ்சாவூர்:கும்பகோணம், சாரங்கபாணி கோவிலில், நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம், சாரங்கபாணி சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில், நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக திகழ்கிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சாரங்கபாணி பெருமாளை, ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இக்கோவிலின் தேர், திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் தேருக்கும் அடுத்து மூன்றாவது பெரிய தேராக விளங்கக்கூடியது. தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது, 110 அடியாகவும், 5 லட்சம் கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும்.
இத்தகைய சிறப்புபெற்ற சாரங்கபாணி கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை ஆரவமுதன் என்ற சாரங்கபாணி, உபநாச்சியார்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர், மங்கள வாத்தியம் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். இரவு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE