மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், 100 படுக்கை வசதி அமைத்துத் தரவேண்டும் என, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனிடம், அரசு டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவையில் இருந்து ஊட்டி செல்லும் வழியில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். தலைமை டாக்டர் கண்ணன், டாக்டர் ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர். மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட உள்ள, அவசர சிகிச்சை பிரிவு பகுதிகளை பார்வையிட்டார். மகப்பேறு வார்டுக்கு சென்று, தாய்மார்களிடம் மருத்துவ சிகிச்சை குறித்த விபரங்களை கேட்டறிந்தார். டாக்டர்கள், செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அரசு மருத்துவமனையில், 100 படுக்கைகள் வசதியுடன், வார்டு அமைத்து தர வேண்டும், நவீன சமையல் கூடம், சி.டி., ஸ்கேன் பிரிவுக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும், கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை டாக்டர்கள் தெரிவித்தனர். நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கண் மற்றும் தோல் சிகிச்சை துறை அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். நவீன சமையல் கூடம் அமைக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்," என்றார். ஆய்வில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE