கோவை:விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 3.43 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியது. இதன்படி தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, நாவல், பெருநெல்லி, செம்மரம், புங்கன், வேங்கை, சந்தனம் போன்ற பல்வேறு தரமான மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.வனத்துறை நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்ட, 15 ரூபாய் விலை மதிப்புள்ள மரக்கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மரக்கன்றுகளை விவசாயிகள், தங்கள் நிலத்தின் வரப்பிலோ அல்லது குறைந்த செலவில் விவசாய நிலங்களிலோ நடவு செய்யலாம்.நடவு செய்த இரண்டாம் ஆண்டு முதல், நான்காம் ஆண்டு வரை நல்ல முறையில் பராமரிக்கப்படும் மரக்கன்று ஒன்றுக்கு, ஆண்டுக்கு 7 ரூபாய் வீதம் மூன்று ஆண்டுக்கு 21 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.இந்த மரக்கன்றுகள் வளர்ந்த நிலையில், அறுவடை செய்வதற்கு வனத்துறை அனுமதியை எளிதில் பெற வசதியாக, வருவாய்த்துறை அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகின்றன. பயனடைய விரும்பும் விவசாயிகள், வேளாண் விரிவாக்க மையத்திலோ, உழவன் செயலி மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று, கோவை கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE