சிவகாசி:வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாராய்ச்சியில் முன்னோர் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன பானைகள் அதிகளவில் கிடைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் தோண்டப்பட்ட குழிகளில் தக்களி, பொம்மை, அகல் விளக்கு , புகை பிடிப்பான் கருவி, விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளது.
மேலும் முன்னோர் பயன்படுத்திய பானைகளின் உடைந்த ஓடுகள் அதிகளவில் கிடைத்த நிலையில் தற்சமயம் புதிதாக தோண்டப்பட்ட குழிகளில் சுடுமண்ணால் ஆன முழுமையான பானைகள் கிடைத்துள்ளது. பானைகள் முழுவதும் மணலால் மூடிய நிலையில் இருப்பதால், அதனை உடையாமல் பாதுகாப்பாக எடுப்பதற்கு அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்காக பானைகள் குழியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, தற்சமயம் உடையாத முழுமையான பானைகள் கிடைத்துள்ளது. மணல் மூடிய நிலையில் உள்ள பானைக்குள் முக்கிய பொருட்கள், திரவம் இருக்கலாம் என்பதால் அதனை குழியிலேயே வைத்து பாதுகாத்து, திறக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வில் இரண்டு சிவப்பு பானைகள் வெளிப்பட துவங்கியுள்ளன. கீழடியில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.
பானைகளுடன் கூடிய நீண்ட சுவர், தோடுடன் கூடிய தலைப்பகுதி, சுடுமண் பொம்மை, நீள்வடிவ தாயகட்டை என, தொடர்ந்து பண்டைய கால பொருட்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
ஏழாம் கட்ட அகழாய்வின் போது, சிவப்பு பானை கண்டறியப்பட்டது. நான்கு அடி உயரம் கொண்ட அது தானிய சேமிப்பு பானையாக இருக்கலாம் என கருதப்பட்டது. எட்டாம் கட்ட அகழாய்விலும் அதேபோன்று இரண்டு பானைகள் அருகருகே வெளிப்பட்டுள்ளன. இதுவரை மூன்று அடி உயரம் வெளிப்பட்டு உள்ள நிலையில், இன்னமும் கீழ்ப்பகுதி வெளிப்படாததால் இதன் உயரம் அதிகரிக்கக்கூடும் என தெரிகிறது. சேதமடைந்துள்ள இப்பானையை முழுமையாக வெளிக்கொணர தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE