மதுரை:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பதிவான 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகளை ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், முறைகேடாக இ பாஸ் பெற்றது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. இறப்பு, திருமண நிகழ்ச்சிக்காக ஆன்லைனில் பதிவு செய்து இ பாஸ் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதை சிலர் தவறாக பயன்படுத்தி விற்றனர். இதுதொடர்பான வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டனர். தவிர வாகன சோதனையில் போலீசாரை மிரட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்றது. சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஊரடங்கு காலத்தில் உத்தரவை மீறி வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்பியவர்கள் மீது 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் வன்முறையில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ பாஸ் பெற்று பயன்படுத்தியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கைவிடப்படும்' என அறிவித்தார்.
இதன்படி தற்போது மொத்தம் 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதில் போலீஸ் வடக்கு மண்டலத்தில் 3,12,168, மத்திய மண்டலத்தில் 1,35,307, மேற்கு மண்டலத்தில் 1,25,034, தென்மண்டலத்தில் 1,60,233 வழக்குகள் அடங்கும். இதுதவிர சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகர் போலீசாராலும் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 15 லட்சத்து 66 ஆயிரத்து 84 பேர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE