பெரும்பாலான பெண்களுக்கு தனது முதல் மாதவிடாய் நிகழ்வு பசுமரத்தாணி போல மனதில் நிற்கும். ஒரு வித பதட்டம், அழுகை, அச்சம், சடங்கு, தனிமை, என ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான அனுபவம்.
பருவம் அடைவது என்பது இயல்பான ஒன்று; அது குறித்து இன்றும் பெண் பிள்ளைகளிடம் பேச பெற்றோர் தயங்குகின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின், முதல் மாதவிடாய் எதிர்கொள்ள அவர்களை பெற்றோர் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம். பள்ளி, விளையாட்டு மைதானம், உறவினர் வீடு, டியூசன், தன் வீடு என எங்கு வேண்டுமானாலும் திடீர் உதிரப்போக்கு ஏற்படலாம். அச்சமயம், தனக்கு என்ன நடக்கிறது, ஏன் ஆடை முழுவதும் ரத்தம், அடி வயிறு வலி, யாரிடம் சொல்வது என பல பதட்டத்தில் அழும் பெண் பிள்ளைகளே அதிகம். இதை முன்கூட்டியே கூறிவிட்டால், அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு, பதட்டமின்றி முதல் மாதவிடாய் எதிர்கொள்வார்கள்.முதல் மாதவிடாய் ஏற்படும் போதும், ஏற்பட்ட பின்பும் ஒரு பெண் பிள்ளைக்கு தன் தாயின் உதவி, அரவணைப்பு அதிகம் தேவை இருக்கும். பொதுவாக பருவம் அடைந்த மூன்று, நான்கு மாதங்களுக்கு மாதவிடாய், சரியான சுழற்சியில் இருக்காது. இதனால், அவர்கள் அதை சரியாக பின்பற்றுவது சிரமம்.இதுகுறித்து, குழந்தைகள் உளவியல் பயிற்சியாளர் மற்றும் ஆசிரியை உஷா கூறியதாவது:பருவமடைவது என்பது ஒரு பெண்ணின் வாழ்வில், முக்கிய மைல்கல். உடலளவில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என்பதால், பெற்றோர் அவர்களை தயார்படுத்த வேண்டியது அவசியம். இதனால், பத்து வயதை கடந்த குழந்தைகளுக்கு இது பற்றி சொல்லி கற்றுக்கொடுக்க துவங்கலாம்.
அறிகுறிகள் இதுதான்
பிள்ளைகளால் அறிகுறிகளை அறிந்து கொள்வது சிரமம். பெற்றோர் சற்று உஷாராக இருந்தால் ஆரம்ப அறிகுறிகளை கண்டறியலாம். அந்தரங்க பகுதிகளில் ரோமங்கள் வளர துவங்குதல், மார்பகங்கள் பெரிதாகுதல், முகப்பரு வரத்துவங்குதல், வயிறு வீக்கம், மார்பகங்களில் வலி, முதுகு வலி, சோர்வு, இனிப்புகள் மீது அதிக ஆர்வம், வெள்ளைப்படுதல், நண்பர்களுடன் விளையாடுவதில் திடீர் மாற்றங்கள், சற்று தனிமைப்படுத்தி ஒதுங்கி நிற்பது, சிலருக்கு திடீர் எடை ஏற்றம் போன்றவை வாயிலாக, பருவம் எய்திவிடுவாள் என்பதை கணிக்கலாம்.அச்சமயத்தில், திடீரென்று உதிரப்போக்கு வந்தால் அதுகுறித்து அச்சப்படவேண்டியதில்லை; இயல்பானது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.யாரிடம் கூறவேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவேண்டும். ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டவுடன், அவர்களின் பையில் எப்போதும் 'பேட்' இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதை பயன்படுத்துவது குறித்து, தாய் செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும். அச்சமயம் அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கட்டாயம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE