அவிநாசி:அத்திக்கடவு -- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் பணி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சிகளின் கழிவுநீரால், பாதிப்பு வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி, 1,075 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது.இதற்காக, பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பவானி ஆற்றில் மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்பு உள்ளிட்ட கட்டுமானங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பவானி ஆற்றில் கலக்கிறது.இதனால், அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டப்படும் போது, சுகாதாரமற்ற தண்ணீர், குளம், குட்டைகளுக்கு சென்று, மண் வளம் பாதிக்குமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.இது குறித்து கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறியதாவது;அத்திக்கடவு -- அவிநாசி திட்டப்பணி, 94 சதவீதம் முடிந்து விட்டது. ஆங்காங்கே விடுபட்ட வேலைகள் நடந்து வருகின்றன.பவானி ஆற்றில், பொதுவாகவே நீரோட்டம் அதிகமாக இருக்கும். அதில் கலந்து வரும் கழிவுகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு விடும். காலிங்கராயன் அணைக்கட்டு நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரிநீர் தான், அத்திக்கடவு திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.பெரு மழையின் போது வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, ஆரம்ப நிலையிலேயே, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சி உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து ஆற்றில் வரும் கழிவுகள் தானாகவே அடித்து செல்லப்பட்டு விடும். நீர் செறிவூட்டும் போது, சுத்தமான தண்ணீர் தான் கிடைக்கும். திட்டத்தை, சரியான முறையில் செயல்படுத்த அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE