மதுரை,-'அறிவியல் கருத்துக்களை சமுதாய வானொலிகள் மூலம் தமிழில் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என விஞ்ஞான் பிரச்சார் இயக்குனர் நகுல் பராசர் பேசினார்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், அறிவியல் பலகை, தானம் அறக்கட்டளை சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் சமுதாய வானொலிகள் மூலம் அறிவியல் கருத்துக்களை பரப்ப விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தது. தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை வரவேற்றார்.தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது: 'ஷியாமளா வாணி' சமுதாய வானொலி மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல், விவசாயம், சமுதாயம் தொடர்பாக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை வழங்குகிறோம். சமுதாய வானொலி நடத்துவது பெரும் முயற்சி. இதை தற்சார்புள்ளதாக நடத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.விஞ்ஞான் பிரச்சார் இயக்குனர் நகுல் பராசர் பேசியதாவது: அறிவியல் கருத்துக்களை சமுதாய வானொலிகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துளோம். முதல் முயற்சியாக தமிழில் இந்நிகழ்ச்சி துவக்கப்படுகிறது.
தமிழ் நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் அனுபவம் அடிப்படையில் பிற மொழிகளில் நிகழ்ச்சியை விரிவுபடுத்துவோம். உள்ளூர் நேயர்களின் விருப்பமறிந்து நடப்பு அறிவியல், பொது சுகாதாரம், மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பை உள்ளடக்கமாகக் கொண்டு நிகழ்ச்சியை வடிவமைக்கலாம் என்றார்.விஞ்ஞான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன், சமுதாய வானொலிகளின் குழு (ஸ்கோப்) தலைவர் ஸ்ரீதர், முதன்மை அறிவியல் அலுவலர் லெனின் தமிழ்கோவன், அறிவியல் பலகை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், ஊடகவியல் கருத்தாளர்கள் ராஜேந்திர மிஸ்ரா, ஆனந்த்குமார் தாக்கூர், முருகன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE