பொன்னேரி : 'பழமையான கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என, போது, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.எம்.எல்.ஏ.,க்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, மேலுாரில் உள்ள திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள், சமஈஸ்வரர் கோவில், திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அர்ச்சகர்கள், மக்களிடம் கேட்டறிந்தார்.ஆய்விற்கு பின் தெரிவித்ததாவது:தமிழகத்தில், ஒராண்டில், 2,666 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிதியாண்டில், 1,500 கோவில்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மீஞ்சூர், திருவுடையம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைப்பது குறித்தும், கோவிலுக்கு வரும் சாலைகளை சீரமைப்பது குறித்தும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
பழவேற்காடு ஆதிநாராயண சுவாமி கோவிலில், 14 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அந்த கோவிலில், திருப்பணி மேற்கொள்ள உள்ளோம். கோவிலின் பழமை மாறாமல் முழுமையாக புனரமைத்து தரப்படும்.பழவேற்காடு சமஈஸ்வரர் கோவிலும், 1,000 ஆண்டுகள் பழமையானது. அந்த கோவிலினையும் புனரமைத்து, கோவிலுக்கு வரும் அணுகு சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில், 2007ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு, 8 கோடி ரூபாயில், தங்க ரதம் செய்ய அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே கோவிலில், 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE