திருப்போரூர் : திருப்போரூர் அடுத்த இ.சி.ஆர்., முட்டுக்காடு கிராமத்தில், தனியார் கிரானைட் நிறுவனத்திற்கு சொந்தமாக சர்வே எண்: 104/3ல், 5.88 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு 50 கோடி.நிலம் மோசடியில் ஈடுபடும் ஒரு கும்பல், மேற்கண்ட சொத்தை அபகரிக்க, பல்வேறு வகையான போலி ஆவணங்கள் தயார் செய்து, பத்திரப்பதிவு செய்துள்ளனர்.இதை அறிந்த கிரானைட் நிறுவனம், நிலம் மோசடி குறித்து தாம்பரம் பெருநகர காவல் ஆணையரகத்தில் புகார் செய்தது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.ஒரு சொத்தை வெளியிடங்களில் பத்திரப்பதிவு செய்தால், அந்த பத்திரப்பதிவு தொகுப்பை சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.அந்த வகையில் சைதாப்பேட்டையில் பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட சொத்தின் பத்திரப்பதிவு தொகுப்பு, திருப்போரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த பத்திரத்தில் சில ஆவணங்களைச் சேர்க்க நினைத்த நில மோசடி கும்பல், திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியராக பணியாற்றும் காசி, 56, என்பவரை அணுகியுள்ளது.
'செட்டில்மென்ட்'
அவரும், சைதாப்பேட்டையிலிருந்து அனுப்பப்பட்ட பத்திரப்பதிவு தொகுப்பில், மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுர என்பவர் பெயரில் 1971ல் பதிவு செய்ததுபோல் திருத்தி, போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கோப்பில் இணைத்துள்ளார்.இதையடுத்து, தங்கள் வசம் இருந்த ஆவணம் தொலைந்து விட்டதாக, மதுராந்தகம் காவல் நிலையத்தில், அந்த கும்பல் புகார் அளித்தது. பின், போலீசாரிடமிருந்து, ஆவணம் கிடைக்கவில்லை என்ற சான்றிதழ் பெற்று, அதன் வாயிலாக திருப்போரூரில் சார் - பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்ட ஆவணத்தின் நகலை பெற்றுள்ளது.தொடர்ந்து, அந்த சொத்தின் நகலை வைத்து, 2020, டிசம்பர் மாதம், மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுர, தன் மகன் ரஞ்சித்குமார், 43, என்பவருக்கு குடும்ப 'செட்டில்மென்ட்' கொடுப்பதுபோல், போலி ஆவணம் தயாரித்துள்ளது.அப்போது சார் - பதிவாளராக இருந்த செல்வசுந்தரி வாயிலாக பத்திரப்பதிவு நடந்துள்ளது. காசி உறவினர் பிரபாகரன், 33, போலி ஆவணம் எழுதிக்கொடுத்துள்ளார்.
பணியிடை நீக்கம்
இவ்வாறு ரஞ்சித்குமாருக்கு ஆதரவாக, அவர் தந்தை மதுர, அப்போதைய சார் - பதிவாளர் செல்வசுந்தரி, தற்காலிக ஊழியர் காசி, அவர் மருமகன் பிரபாகரன் மற்றும் சிலர் செயல்பட்டதாக, தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, திருப்போரூரைச் சேர்ந்த காசி, ரஞ்சித்குமார், பிரபாகரன் ஆகியோரை, போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.சார் - பதிவாளராக இருந்த செல்வசுந்தரி 2021, பிப்ரவரி மாதம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE