காஞ்சிபுரம் : முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் மற்றும் முன்னாள் படை வீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்து, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது:நம் நாட்டின் பாதுகாப்பு பணியின்போது, உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் காயமடைந்த முப்படை வீரர்களுக்கு, அவர்கள் படையிலிருந்து வெளிவந்த பின், அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலப்பணிகள், முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 670 முன்னாள் படை வீரர்கள் மற்றும் 565 கைம்பெண்கள், அலுவலகத்தில் பதிவு செய்து அடையாள அட்டைவழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு, நம் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - பி.இ., உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக 132 முன்னாள் படை வீரர்கள் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவில் பதிவு செய்துள்ளனர்.இதன் மூலம் ஓராண்டில், எட்டு முன்னாள் படை வீரர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.மேலும், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு, ஓராண்டில் வேலைவாய்ப்பிற்காக முன்னுரிமைச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
படைப்பணியில் இருந்து வெளிவரும் அனைத்து முன்னாள் படை வீரர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பு அளிப்பது இயலாத நிலை உள்ளது. எனவே சுய தொழில் துவங்கி, வங்கிக்கடன் வட்டி மானியம் பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர் நல அலுவலர் ஸ்குவார்டன் லீடர் சுரேஷ் நாராயணன், முன்னாள் படை வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE