வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை-மதுரை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் ஆக்கிரமித்துள்ளகடைகளை அகற்றும் பொறுப்பு நெடுஞ்சாலைத் துறைக்கு தான் என மாநகராட்சியும், மாநகராட்சிக்குதான் என நெடுஞ்சாலைத் துறையும்நீயா, நானா பாணியில் குழப்பத்தைஏற்படுத்தி தவிக்க விடுகிறார்கள்
.காளவாசல் சிக்னல் முதல் பழங்காநத்தம் பாலம் வரைபைபாஸ் ரோட்டின் இருபுறமும் ஷவர்மா, தந்துாரி, பானிபூரி, இட்லி, பழங்கள் என நிரந்தர உணவு திருவிழா நடத்துவது போல் ஆக்கிரமித்து கடைகளை விரித்துள்ளனர். பல ஆண்டுகளாக பைபாஸ் ரோட்டின் நிலை இது தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார்பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவங்கிய பின் அங்கிருந்த கடைகள் தற்காலிகமாக பைபாஸ் ரோட்டிற்கு மாற்றப்பட்டன. ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளால் சிக்கி தவிக்கும் நிலையில் கூடுதலாக வந்த கடைகள் மேலும் நெரிசலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
தெறிக்கவிடும் காய்கறி மார்க்கெட்
மெயின் ரோடு மட்டுமின்றி சர்வீஸ் ரோட்டையும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சொக்கலிங்க நகர் சர்வீஸ் ரோட்டில் வெள்ளிக்கிழமை வந்தாலே அப்பகுதி வியாபாரிகள் பீதி ஆகின்றனர். காரணம் காய்கறி மார்க்கெட்டால் ஏற்படும் கடும் நெரிசல். ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலை. மாநகராட்சிதான் ஏலம் விட்டு மார்க்கெட் நடத்துகிறது. ஏலம் விடும் முன்பே வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். ஆனால் வேறு இடம் இல்லை என அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். சொக்கலிங்க நகர் எதிரேயுள்ள சர்வீஸ் ரோட்டில் கூட மார்க்கெட்டை மாற்றலாம். அங்கு பெரியளவுபோக்குவரத்து இல்லை. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மேயர், துணை மேயர்,கமிஷனர், கவுன்சிலர்கள்இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். முதல்வர் ஸ்டாலினும் இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
'சீன்' போடாதீங்க அதிகாரிகளே
பைபாஸ் மெயின் ரோடுகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பொறுப்பு நெடுஞ்சாலைத்துறைக்கு தான் உள்ளது. ஆனால் கடைகளை அகற்ற ஏன் தயங்குகிறதுஎன்று தெரியவில்லை. ஒருவேளை 'கவனிப்பாக' கூட இருக்கலாம். இதற்கு போலீசும் உடந்தை. தினமும் எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் இருந்து வரும் சிலர் கடைக்கு ரூ.200 வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கண்டும், காணாமல் இருப்பதால் கடைகளுக்கு முன் ரோட்டில் கார்கள், டூவீலர்களை 'டபுள் பார்க்கிங்' செய்துள்ளனர். இதை கூடவா தடுக்க முடியவில்லை.முதலில் கடை வைத்தவர்கள், இன்று கான்கிரீட் தளம் அமைத்து பெரும் கடைகளாக மாற்றிவிட்டனர். என்றோ ஒரு நாள் 'நாங்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்' என நெடுஞ்சாலை, மாநகராட்சி அதிகாரிகள் லேசாக ஒரு கடையை தட்டி விட்டு 'சீன்' போட்டு விட்டு செல்வதை நிறுத்தி நிரந்தர தீர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.
சுகாதாரமில்லாத ரோடு கடைகளுக்கு சான்று
மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் வைப்பதே தவறு. ஆனால் அந்த கடை சுகாதாரமான உணவுகளை தயாரிக்கிறது என உணவு பாதுகாப்பு துறையினர்சான்றிதழ் வேறு கொடுத்துள்ளனர். சான்றிதழ் பெற்ற பல கடைகளில் உணவு தயாரிப்பவர்கள் கையுறை, தலையுறை அணிவதில்லை. ஒரே தண்ணீரில் பாத்திரங்களை கழுவுகிறார்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், பாலிதீன் பை பயன்படுத்துகிறார்கள்.ஒரு முறை சுகாதாரமாக உணவு தயாரிப்பதை வைத்து சான்றிதழ் கொடுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதில்லை. ரோட்டோரம் கடை வைத்து சுகாதாரமாக உணவு தயாரித்தாலும் சான்றிதழ் இல்லை என உணவு பாதுகாப்பு துறையினர்தெரிவிக்க வேண்டும்.ஏதோ கடமைக்கு அவர்களும் சான்றிதழை 'பிட் நோட்டீஸ்' போல் கொடுத்து செல்கிறார்கள்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுரையில் நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், அனுமதி பெறாத பஸ் ஸ்டாப்புகளை அகற்றவுள்ளோம். தெற்குவாசல், கூடல் நகர், கோரிப்பாளையம்பகுதிகளில் அகற்றியுள்ளோம். விரைவில் காளவாசல், பைபாஸ் ரோட்டில் அகற்றவுள்ளோம்.சர்வீஸ் ரோடு மார்க்கெட் கடைகள் குறித்து மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தானே அந்த ரோட்டை குறிப்பிட்டு ஏலம் விட்டுள்ளனர். பைபாஸில் கடைகள் வைத்துள்ளவர்கள் தாங்களாகஅகற்றினால் பொருட்கள் சேதம் தவிர்க்கப்படும். போலீசாரும் மாமூல் வாங்குவதை நிறுத்தி, ரோட்டோர கடைகளை அனுமதிக்க கூடாது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE