பல்லாரி : பல்லாரியில் 27 வயது முதுகலை பட்டதாரி பெண் ஒருவர், கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை புறந்தள்ளி, இயற்கை விவசாயம் செய்து சாதனை படைத்துள்ளார்.பல்லாரி மாவட்டம், ஹகரிபொம்மனஹள்ளி தாலுகா, அடவி ஆனந்த தேவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தீப்தி பாலகோடேஸ்வரராவ், 27.பி.இ., பொறியியல் படிப்பு முடித்து விட்டு, எம்.பி.ஏ., முதுகலை படித்துள்ளார்.
பிரபல தனியார் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் தருவதாக வேலைக்கு அழைத்தனர்.அந்த பணியை புறந்தள்ளி விட்டு, விவசாயம் செய்ய ஆர்வம் காட்டினார். இன்றையக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து விவசாயத்தில் பெரும் சாதனை படைத்துள்ளார். ஆரம்பத்தில் 20 ஏக்கர் நிலத்தில் மாதுளை பயிரிட்டு நஷ்டம் அடைந்தார். முதலீடு செய்த பணம் கூட கிடைக்கவில்லை.தோல்வியை கண்டு துவண்டு போகவில்லை. அதே நிலத்தில், 300 நாவல் செடிகள், ஆயிரம் பப்பாளி செடிகள், ஆறு ஏக்கரில் சாத்துக்குடி ஆரஞ்சு செடிகள் நட்டார். ஆங்காங்கே மூன்று குளங்கள் உருவாக்கி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்தார். அதில் மீன்களும் வளர்க்கிறார்.இத்துடன், 40 நாட்டு பசுக்கள், 500 க்கும் அதிகமான நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். பசுக்களின் சாணம், மரம், செடிகளின் இழைகள் பயன்படுத்தி தானே இயற்கை உரத்தை தயாரிக்கிறார்.இயற்கை விவசாயம் செய்வதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அடிக்கடி விவசாயிகள் வந்து அவரிடம் தகவல் பெற்று செல்கின்றனர்.இவரது சாதனையை பாராட்டி, பாகல்கோட் தோட்டக்கலை பல்கலைக்கழகம், '2021ல் சிறந்த தோட்டக்கலை பெண்' என்ற விருது வழங்கி கவுரவித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE