காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஹம்ச வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா சென்றார்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இரண்டாம் நாள் உற்சவமான நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு, ஹம்ச வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, டி.கே.நம்பி தெரு, விளக்கடிகோவில் தெரு, மூங்கில் மண்டபம், இரட்டை மண்டபம், ராஜ வீதி செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்காரத் தெரு வழியாக வீதியுலா சென்று கோவிலை அடைந்தார். மாலை, சூரிய பிரபையில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.
மூன்றாம் நாள் பிரபல உற்சவமான கருடசேவை உற்வசத்தின்போதும், ஆறாம் நாள் உற்சவமான யானை வாகனத்தின்போதும் சுவாமிக்கு நிழல் தரும் வகையில் புதிய திருக்குடை ஏந்திச் செல்வது வழக்கம். அதன்படி இன்று கருடசேவை உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமிக்கு திருக்குடை தயாரிக்கும் இறுதிக்கட்டப்பணி நேற்று இரவு வரை தீவிரமாக நடந்தது.சுவாமி திருக்குடை தயாரிப்பாளர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறியதாவது:ஆன்மிகத்தின் அடையாளமாக ஸ்ரீரங்கம் நடை, காஞ்சிபுரம் குடை, திருப்பதி வடை என குறிப்பிடுவர். அதன்படி, காஞ்சிபுரத்தில் தயாராகும் சுவாமி திருக்குடை புகழ்பெற்றது. ஐந்து தலைமுறைக்கு மேலாக சுவாமி திருக்குடை செய்து வருகிறோம்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருடசேவை உற்சவத்தின்போது, ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு புதிய திருக்குடை தயார் செய்து கருடசேவை புறப்பாட்டின்போது ஏந்திச் செல்லப்படும்.நடப்பு ஆண்டு கருடசேவை உற்சவத்திற்காக, 3 மீட்டர் ஆரத்திற்கு, புதிய திருக்குடை செய்யும் பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது. கேரளா மூங்கிலும், அசல் பட்டு துணியை பயன்படுத்தியும் திருக்குடை செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE