கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிறு, குறு தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார்.
கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழில் துவங்குவதற்கு அனைத்து கட்டமைப்பு வசதி மற்றும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. அதன்படி, புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை நவீன மயமாக்கவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் தற்போது நிதியுதவி அளித்து தொழில் வளர்ச்சிக்கு விதித்திட்டு வருகிறது.மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் கடனுதவிகள் குறித்து திட்ட செயலாக்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட்டது.
மாவட்டத்தில், அமைச்சர்களின் ஒப்புதலுடன் தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் விரைவில் சிறப்பு தொழில்கடன் மேளா நடத்தப்பட உள்ளது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தொழில் துவங்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிதியுதவிகள் குறித்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி கடனுதவி பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், கிளை மேலாளர் சுந்தரேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE