புதுச்சேரி : 'கடனை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தினால் இலங்கை நிலைதான் புதுச்சேரிக்கு ஏற்படும்' என சம்பத் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தின் மொத்த கடன் தொகை ரூபாய் 9,334.78 கோடியாக உள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டு பட்ஜெட் தொகை மாநிலத்திற்கு கடனாக உள்ளது.
இது வருந்தத்தக்கது.இப்படியே சென்றால் உள்நாட்டு மாநில உற்பத்தி குறைந்து, கடன் வாங்குவதிலும் சிரமம் ஏற்படும். கடன் கொடுக்க முன்வரும் அமைப்புகள் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும், மானியங்கள், உதவித்தொகை போன்றவை கொடுக்கக் கூடாது என கடும் நிபந்தனை விதிக்கும். நிலைமை கைமீறி செல்வதற்குள் அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டும்.எனவே முதல்வர் உடனடியாக தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, விவசாய உற்பத்தியை பெருக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, புதுச்சேரிக்கு வரவிருக்கும் ஆபத்தை தடுக்க வேண்டும்.சுற்றுலாவையும், கடனையும் நம்பி ஆட்சி நடத்தக் கூடாது. இல்லையெனில் இலங்கை நிலை தான் புதுச்சேரிக்கு ஏற்படும். என்.ஆர் காங்., ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் எதுவும் மாறவில்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்க தொழிலதிபர்கள் முன்வரவில்லை.அரசு கூட்டுறவு நிறுவனங்களான ஏ.எப்.டி., பாரதி, சுதேசி, ஸ்பின்கோ ஆகிய பஞ்சாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை உட்பட மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தகவல் தொழில்நுட்ப பூங்கா ஏற்படுத்த சேதராப்பட்டில் நிலம் கையகப்படுத்தி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. அதை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE