கரூர்-குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவுள்ள நிலையில், காவிரியாற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தன. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில், இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்கள் மூலம், மணல் திருட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது.குறிப்பாக, கரூர் மாவட்ட எல்லையான தளவாப்பாளையம், என்.புதுார், கடம்பங்குறிச்சி, வாங்கல், நெரூர், திருமுக்கூடலுார், கட்டளை, மாயனுார், லாலாப்பேட்டை, குளித்தலை உள்ளிட்ட காவிரியாற்று பகுதிகளில், பிளாஸ்டிக் பைகளில் மணலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், இருசக்கர வாகனங்கள் மூலம் கொண்டு செல்வது நடந்து வருகிறது. அப்போது, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வருவதை தெரிந்து கொண்டு, மணல் கொள்ளையர்கள் பிளாஸ்டிக் பைகளை, அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடி விடுகின்றனர்.இதனால், கரூர் மாவட்டத்தில், காவிரி கரையோர பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன. ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து, காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.அப்போது, ஆற்றில் உள்ள பிளாஸ்டிக் பைகளால், பெரும் சிக்கல் ஏற்படும் என, விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'கடந்த, 2018, 2019, 2020, 2021ல் காவிரியாற்றில் அதிளகவில் தண்ணீர் சென்றது. இதனால், பல இடங்களில் மணல் தேங்கியுள்ளது. மணல் குவாரிகள் செயல்படாததால், அனுமதி பெறாமல் மாட்டு வண்டிகள், இருசக்கர வாகனங்களில் மணல் கொண்டு செல்லப்படுகிறது. மணல் அள்ள கொண்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் பைகள், காவிரியாற்று பகுதிகளில் அதிகளவில் உள்ளன. அடுத்த மாதம், 12ல் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் போது, பிளாஸ்டிக் பைகள் அடித்து செல்லப்பட்டு, கிளை வாய்க்காலில் உள்ள மதகுகளில் அடைத்து விடும். இதனால், கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க, 28 நாள் உள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் கரையோர பகுதிகளில் உள்ள, பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE