தர்மபுரி-"நடமாடும் தக்காளி கூழ் இயந்திரத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என கலெக்டர் திவ்யதர்ஷினி பேசினார். தர்மபுரி அடுத்த பச்சனம்பட்டியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை வணிகத்துறையின் நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திர செயல்பாட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி பார்வையிட்ட பின் அவர் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், ஆண்டுக்கு, 58 ஆயிரத்து, 400 டன் தக்காளி விளைகிறது. விளைச்சல் அதிகரிக்கும் போது, விலைவீழ்ச்சி அடைவதால், தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கின்றனர். இதை தடுத்து, தக்காளி மதிப்பு கூட்டும் பொருட்களான தக்காளி ஜாம், சாறு தயாரிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், 80 லட்ச ரூபாயில், தர்மபுரி மாவட்டத்துக்கு, இரண்டு நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதில், ஒரு இயந்திரம் பாலக்கோட்டில் உள்ள மருதம் உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கு, மூன்றாண்டுக்கு ஒப்பந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மற்றொன்று அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தர்மபுரி, மாவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், விலை வீழ்ச்சியின் போது இழப்பை சந்திக்காமல் இருக்க, நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் கணேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி உட்பட, பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE