போச்சம்பள்ளி,-நெடுங்கல் தடுப்பணையில் மதகுகள் மாற்றப்பட்டு, ஒரே ஆண்டில் மதகுகளில் நீர்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் பகுதியில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, 1887-1889 காலகட்டத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் நெடுங்கல், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையே இத்தடுப்பணைக்கு நீர் ஆதாரமாகும். இந்த தடுப்பணை மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள, 2,000 ஏக்கர் பயன்பெறும். மேலும் தடுப்பணை நிரம்பி உபரி நீர் கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கும், மழைகாலங்களில் உபரி நீர் பெனுகொண்டாபுரத்திலிருந்து கல்லாவி வழியாக ஊத்தங்கரைக்கும், மற்றொரு கால்வாய் வழியாக பாம்பாறு அணைக்கு இணைப்பும் கொடுக்கப்பட்டு, 5,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 134 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தடுப்பணையின் மதகுகளை மாற்ற நீண்ட கோரிக்கைக்கு பின் புதிய மதகு அமைக்கும் பணி நடந்தது. இப்பணியை கடந்த ஓராண்டாக செய்து வருவதாகவும், தயார் செய்யப்பட்டுள்ள புதிய மதகுகள் அதே பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு துருப்பிடித்து விட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் தடுப்பணையின் மதகுகள் சிதிலமடைந்து நீர்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையில் தேக்கப்பட்ட தண்ணீர் அனைத்தும் வெளியேறிவிட்டதாகவும், தற்போது தென்மேற்கு பருவமழையும் துவங்கியுள்ள நிலையில் உடனடியாக புதிய மதகுகளை அமைத்தால் தான், தண்ணீரை தேக்கி வரும் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் கூறினர்.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் உடனடியாக மதகுகளை மாற்ற முடியவில்லை. இன்னும், 15 நாட்களில் புதிய மதகு மாற்றும் பணி தொடங்கும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE