புதுச்சேரி, : மில்கள் மூடுவதை அரசு நிராகரித்து, தொடர்ந்து நடத்த வேண்டும் என முன்னாள் எம்.பி., ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி தொழில் துறை, சுதேசி, பாரதி மில்களை இம்மாத இறுதியில் மூடிவிட அரசுக்கு பரிந்துரை செய்திருப்பது மிகவும் துரதிருஷ்ட வசமானது.
இதனை அரசு நிராகரித்து, மில்களை தொடர்ந்து இயக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.ஒரு சிறிய யூனியன் பிரதேசத்தில் பெரிய தொழிற்சாலைகளை ஒவ்வொன்றாக மூடினால் அதன் சமூக, பொருளாதார விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.ரோடியர் மில்லை நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறும் கவர்னர், இந்த இரு மில்களையும் நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். மில்களை இயக்குவதுதான், பெஸ்ட் புதுச்சேரியையும், டீம் புதுச்சேரியையும் உருவாக்கும் என்பதை கவர்னர் உணர வேண்டும்.\
புதுச்சேரியை மிளிரும் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றால், இங்கே தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதற்கான கட்டுமானம் ஜவுளித் துறையில் நன்கு அமைந்துள்ளது. அவற்றை தற்போது சீர மைக்க வேண்டியது தான் அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.ரோடியர், சுதேசி, பாரதி, ஸ்பின்கோ, காரைக்காலில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் மில்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தினால்
புதுச்சேரியில் தொழில் துறை முன்னேறும். அதன் மூலம் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.இந்த ஐந்து மில்களையும் ஒருங்கிணைத்தால் செழிப்பு உண்டாகும். மூடினால் அழிவு தான் மிஞ்சும். செழிப்பா, அழிவா என்பதை கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE