ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ரிஷிவந்தியம், கரையாம்பாளையம், ஆதிதிருவரங்கம், பழைய சிறுவங்கூர், அத்தியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் அரசு சார்பில் சமுதாய கூடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த சமுதயக் கூடங்களில், கிராமப் புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் தங்களது இல்ல சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் சமுதாய கூடங்கள் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சி நடத்துபவரிடமிருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு, ஊராட்சி கணக்கில் சேர்ப்பதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருமானம் கிடைக்கும்.போதிய பராமரிப்பில்லாததால் பழைய சிறுவங்கூர் மற்றும் அத்தியூர் கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடம் பழுதாகி உள்ளது. கட்டடங்கள் பலமிழந்திருப்பதால், மதுபிரியர்களின் கூடாரமாகவும், கால்நடைகளைக் கட்டும் இடமாகவும் உள்ளது.இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அருகில் உள்ள தனியார் மண்டபங்களுக்குச் செல்கின்றனர்.எனவே, பழைய சிறுவங்கூர் மற்றும் அத்தியூர் கிராமங்களில் பாழடைந்த நிலையில் உள்ள சமுதாய கூடங்களைப் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் புத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு இடத்தில் புதிய சமுதாய கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE