உடுப்பி : ''கடவுள் அனுகிரஹம் பெற வேண்டுமெனில், சமூக சேவை செய்வதே சிறந்த மார்க்கமாகும். சமூக சேவையே, நாராயண சேவையாகும்,'' என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை கூறினார்.இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பெங்களூரு வந்தார்.
இங்கிருந்து உடுப்பி சென்றார்.முதலில் கிருஷ்ணர் மடத்தில் கனகன கிண்டியில் உள்ள கிருஷ்ணரை தரிசித்தார். பர்யாய கிருஷ்ணாபுரா மடாதிபதி வித்யா சாகர தீர்த்த சுவாமிகளிடம் ஆசி பெற்றார். அவர் வழங்கிய பிரசாத்தை பெற்று கொண்டார்.பின், பிரசித்தி பெற்ற கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பல ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.அதன் பின்னர், உடுப்பியின் குக்கிகட்டேவில் உள்ள பெஜாவர் மடத்தின் ஸ்ரீகிருஷ்ண பாலனிகேத்தனாவில், தன் ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட விடுதியை திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:குழந்தைகள் ஆதரவற்றோர் அல்ல. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகின்றனர்.
அத்தகையோர் மீது அக்கறை செலுத்துவது அவசியம். தெய்வீகமடைந்த பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள், நாடு முழுதும் பயணித்து ஹிந்து மதத்தை வளர்த்தார். தேவைப்படுவோருக்கு உதவி செய்தார்.தற்போதைய மடாதிபதி ஸ்ரீ விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள், அந்த கலாச்சாரத்தை தொடர்ந்து கடைபிடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அனுகிரஹம் பெற வேண்டுமெனில், சமூக சேவை செய்வதே சிறந்த மார்க்கமாகும். சமூக சேவையே, நாராயண சேவையாகும்.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய விவசாய துறை அமைச்சர் ஷோபா, தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ரகுபதி பட் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். உடுப்பி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, நேற்றிரவே நிர்மலா சீதாராமன் பெங்களூரு திரும்பினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE