பெங்களூரு : வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதில் ஏற்பட்ட மோதலில் நண்பர் உயிரிழந்தார்.பெங்களூரு தனிசந்திராவை சேர்ந்தவர் ஜெயகுமார், 31. தனியார் பி.பி.ஓ., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் ரஹில். இவர், ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்துள்ளார். இருவரும் இணைந்து, ஹோட்டல் தொழில் துவங்குவதற்காக, கடந்தாண்டு வங்கியில் 19 லட்சம் ரூபாய் கடன் வாங்கினர்.
இதற்கு, ஜெயகுமாரின் மனைவியும் தனது நகைகளை கொடுத்து உதவியுள்ளார்.மாதந்தோறும் இருவரும் கடனுக்கான வட்டியை செலுத்தி வருகின்றனர். இம்மாதத்துக்கான வட்டி தொகையை ரஹில் கொடுக்கவில்லை. இது தொடர்பாக, மே 12ல் காச்சரஹள்ளியிலுள்ள ரஹில் வீட்டுக்கு ஜெயகுமார் சென்றிருந்தார். அப்போது இருவரும் தொழிலை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேசிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து கடன் வட்டி செலுத்தாதது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், வாக்குவாதம் முற்றி, சமையல் அறையில் காய்கறி வெட்டும் கத்தியால், ஜெயகுமார் மார்பில் ரஹில் கீறினார். அதன் பின், சமாதானம் அடைந்தனர். மார்பில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறாத ஜெயகுமார், ரஹில் வீட்டிலேயே தங்கிவிட்டார்.ஒரு மணி நேரத்துக்கு பின், அவரை எழுப்பியபோது, எழவில்லை. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஜெயகுமார் இறந்துவிட்டதாக கூறினார்.இது குறித்து தகவலறிந்த பானஸ்வாடி போலீசார், கத்தியில் லேசாக கிறியதில் எப்படி இருந்தார் என டாக்டரிடம் கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர், லேசாக கீறியிருந்தாலும் கூட, முக்கியமான நரம்பு அறுக்கப்பட்டதால், இறந்ததாக தெரிவித்தனர்.ரஹிலை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE