நாமக்கல் : நாமக்கல் இந்தியன் வங்கியில், போலி ஆவணங்கள் மூலம் 2.62 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த இரு தொழிலதிபர்களுக்கு, சி.பி.ஐ., நீதிமன்றம், தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் இயற்கை உரம் தயாரிப்பு நிறுவன தொழிலதிபர்கள் சக்திவேல், விஜயகுமாரி ஆகியோர், 2010ம் ஆண்டு இந்தியன் வங்கி கிளையில், போலி சான்றிதழ் கொடுத்து கடன் கேட்டனர்.வங்கி மேலாளர் பாலசுப்ரமணியன், சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல், விதிமுறைகளை மீறி, அவர்களுக்கு கடன் வழங்கினார். இருவரும் கடனை திருப்பிச் செலுத்தவில்லை.இதனால், இந்தியன் வங்கிக்கு, 2 கோடியே, 61 லட்சத்து, 63 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, இந்தியன் வங்கி தரப்பில், கோவை சிறப்பு சி.பி.ஐ., நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்படி, 2010ம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து, நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். போலியான சான்றுகளைக் கொடுத்து, வங்கியை மோசடி செய்து கடன் பெற்ற குற்றத்திற்காக, இருவருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல், விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வங்கி மேலாளர் பாலசுப்ரமணியனுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE