பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: பஸ் கட்டணம் மிக மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட, அது மக்களை கடுமையாக பாதிக்கும். பஸ் கட்டணம் உயர்த்தப்படாது என கடந்த வாரம் தான் சட்டசபையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். ஆனால், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார்; ஏன் இந்த குழப்பம்?
மகளிருக்கு பஸ்கள்ல இலவசம்னு அறிவிச்சப்பவே, கட்டணத்தை ஏத்தியிருக்கணும்... கொஞ்சம் லேட்டா ஏத்தப் போறாங்களேன்னு சந்தோஷப்படுங்க!
திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி: இன்னும் 40 ஆண்டுகளுக்கு, பா.ஜ., கட்சி தான் கோலோச்சும் என்று சொல்வதற்கு பிரசாந்த் கிஷோர் மந்திரவாதி இல்லை.அவர் வியூகம் வகுத்த, சில மாநில தேர்தலில் வெற்றி கிடைத்திருக்கிறது; சில மாநிலங்களில் தோல்வியும் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, கண்டிப்பாக நாட்டின் பிரதமராக ராகுல் வருவார்.
தயவு செய்து ராகுல் பிரதமர்னு சொல்லி ஓட்டு கேட்காதீங்க... கிடைக்கிற சொற்ப ஓட்டுகளும் விழாம போயிட போகுது!
பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: காஞ்சிபுரம் மற்றும்சுற்றுவட்டாரப் பகுதி ரேஷன் கடைகளில், அரிசி மற்றும் கோதுமையில் வண்டு மற்றும் புழுக்கள் காணப்பட்டுள்ளன. பழுப்பு ஏறிய நிலையில் அவை வழங்கப்பட்டது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. உணவுப் பொருட்களில் மோசடி என்பது கடும் குற்றம். இதற்கு உடந்தையாக இருந்த அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், இந்த ஊழலில், தமிழக அரசே ஈடுபட்டுள்ளது என்றே பொருள் கொள்ளப்படும்.
ரேஷன் அரிசியில வண்டு, புழு இருக்குதுன்னு தண்டிக்க ஆரம்பிச்சா, நாளைக்கு தமிழகத்துல ஒரு ரேஷன் கடையையும் திறக்கவே ஆளிருக்க மாட்டாங்க!
தமிழ்நாடு தலைமை செயலகசங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, செயலர் ஆறுமுகம் அறிக்கை: நிதி அமைச்சர் தியாகராஜன், 'பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை' என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், முதல்வர் தலையிட்டுஅனைத்து அரசுப் பணியாளர்,ஆசிரியர் சங்கங்களை அழைத்து பேச வேண்டும். ஏற்கனவே தந்த வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு போன்றவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
உங்க கோரிக்கையில் வேண்டும், வேண்டும் என்ற வார்த்தைகள் தான் அதிகம் உள்ளது. முதல்வரும் பதிலுக்கு, 'இதெல்லாம் செய்றதுக்கு எங்களுக்கு நிதி வேண்டும்; அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்' என பதில் தந்து அனுப்பிட போறாரு!
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை பேட்டி: பிரதமர் மோடி அறிவித்த திட்டங்களில் முறைகேடு நடக்கிறது எனக்கூறி, பா.ஜ., தமிழகத்தில்ஒவ்வொரு தாலுகாவிலும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தவிருப்பது, மாநில அரசின்சுயாட்சி முறையை தவிடுபொடியாக்கும் செயல்.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதால், திருவாரூர்ல அப்பாவி வாலிபர் மணிகண்டன் தற்கொலை செஞ்சுக்கிட்டாரே... அப்ப, மாநில அரசை கண்டிக்காம மவுனமா இருந்துட்டு, இப்ப கொதிக்கிறது முறையா?
பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் அறிக்கை: 2021 பிப்ரவரியில், நீர் மேலாண்மையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, 940 கோடி ரூபாயில், கீழ்பவானி அணை வாய்க்காலின் கரைகளை பலப்படுத்தும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அப்போதே, விவசாயிகளை, தி.மு.க., துாண்டிவிட்டு எதிர்த்தது. ஆட்சிக்கு வந்த பின் விவசாயிகளிடம் ஆலோசிக்காமல், தொழில்நுட்ப குழுவை அமைத்து, அவசர கதியில், 940 கோடி நிதியை பெற தி.மு.க., துடிக்கிறது.
ஆட்சியில இல்லாதப்ப திட்டம்நடந்தா, அவங்களுக்கு தம்பிடி பிரயோஜனம் இருக்காதே... 940 கோடி ரூபாய் நிதியில, 10 பர்சன்ட் கமிஷன் வச்சாலும், 94 கோடியாச்சே... அதான் துடிக்கிறாங்க போல!
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் அறிக்கை: பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என்றதும், அதை எஸ்.சி., மக்களின் தீண்டாமை பிரச்னை ஆக்குவதும் என்ன மாதிரியான அரசியல்? பசு, தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றியது. தி.மு.க., ஆட்சி நடந்தாலும் இங்கே, மாட்டுக் கறியுடன் பொது திருவிழா நடத்த முடியாது.
சரியா தான் சொல்றீங்க... அரசியல்ல உங்க தந்தை, உங்களுக்கு நல்லாவே பயிற்சி குடுத்திருக்கார்னு தெளிவா தெரியுது!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் செந்தில் ஆறுமுகம் அறிக்கை: கூரை வீட்டிலிருந்து, 300 சதுர அடி கான்கிரீட் வீடு கட்டி வாழும் கனவோடு இருந்த, திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், இன்று 6 அடி நிலத்திற்குள் அடங்கிக் கிடக்கிறார். காரணம், ஒரு அதிகாரி கேட்ட லஞ்சம். இதை தடுப்பதற்கான வழிகளை தமிழக அரசு உடனடியாக காண வேண்டும்.
லஞ்சத்தால் ஒரு உயிர் இல்லை; ஓராயிரம் உயிர்கள் பலியானாலும், அரசு கண்டுக்காது. காரணம், இதுதான் திராவிட மாடல் ஆட்சி!
ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் பேட்டி: இலங்கையில் குடும்ப ஆட்சியால் பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது. தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம். இது, திராவிட மாடல் அரசு அல்ல; ராஜபக்சே மாடல் அரசு.
மத்திய அரசு, இங்குள்ளவர்களின் நடவடிக்கைகளை கண்கொத்தி பாம்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறது... அதனால், இலங்கை அளவுக்கு இங்க நிலைமை மோசமாகாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE