சிவகங்கை: வீடியோ கான்பிரன்சிங் ஆய்வு கூட்டத்தின் போது முட்டாள், மூதேவி என திட்டுவதை தவிர்க்குமாறு நகராட்சிகள் நிர்வாக ஆணையர் பொன்னையா விடம் தெரிவித்த சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மே 13ம் தேதி இரவு 8:00 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களின் ஆய்வு கூட்டத்தை வீடியோ கான்பிரன்சிங் மூலம் நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பொன்னையா நடத்தினார்.
சிவகங்கை நகராட்சியில் 'நமக்கு நாமே' திட்டத்தில் மக்கள் பங்களிப்பு தொகை இல்லாத திட்ட பணிக்கான முன் அனுமதி ஏன் வழங்கவில்லை என கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். இதற்கு இன்ஜினியரிங் பிரிவில் இருந்து ஆவணம் வரவில்லை. அந்த ஆவணத்தை பார்த்து பதில் தருவதாக கூறியுள்ளார்.
இதற்கு பொறுமை இழந்த பொன்னையா, சிவகங்கை கமிஷனரை முட்டாள், மூதேவி என திட்டியுள்ளார். அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் முன்னிலையில் இப்படி பேசாதீர்கள் என சிவகங்கை கமிஷனர் தெரிவித்துள்ளார். ஆத்திரமுற்ற பொன்னையா, சிவகங்கை நகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பொறியாளர் பாண்டீஸ்வரிக்கு கமிஷனர் பொறுப்பு வழங்கப்பட்டது.

சிவகங்கையில் நகராட்சி தலைவர் துரைஆனந்த், கமிஷனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மழை நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்களை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் சிலர் பொன்னையாவின் உறவினர்கள் எனக்கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். அப்போது சட்டப்படி தான் வேலை செய்கிறோம் என தலைவர், கமிஷனர் கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர். கமிஷனர் சஸ்பெண்ட்டிற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என நகராட்சி தரப்பில் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE