இது உங்கள் இடம்: இன்னும் நாலு வருடத்திற்கு பூ சுற்றுங்க...! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்: இன்னும் நாலு வருடத்திற்கு பூ சுற்றுங்க...!

Added : மே 15, 2022 | கருத்துகள் (2) | |
ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதை, ஆளுங்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆம்... கொண்டாட வேண்டியது தான். சட்டசபை தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... *'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் *மதுரையில் எய்ம்ஸ்
இது உங்கள் இடம்: இன்னும் நாலு வருடத்திற்கு பூ சுற்றுங்க...!

ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதை, ஆளுங்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆம்... கொண்டாட வேண்டியது தான். சட்டசபை தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... *'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்
*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்
*மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்கப்படும்
*மகளிருக்கு மாதம் ௧,௦௦௦ ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்
*அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்
இவை உட்பட எண்ணற்ற வாக்குறுதிகளை, தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலினும், அவரின் சகோதரி கனிமொழியும், மகன் உதயநிதியும் அள்ளி வீசினர். அவை எல்லாம் தற்போது, 'நிறைவேற்றப்பட்டு' விட்டதால், இப்போது, ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடுகின்றனர். கொண்டாடுங்கள்... நீங்கள் கொண்டாடுங்கள்... சாத்தான்குளத்தில், போலீசார் தாக்கியதில், இரு வியாபாரிகள் பலியான போது, அதை பெரிய பிரச்னை ஆக்கியதுடன், சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தவர் ஸ்டாலின். இப்போது, தமிழகத்தில் நடக்கும், 'லாக் அப்'மரணங்கள் பற்றி கேட்டால், 'அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன. கடந்த ஆட்சியில் நடந்த லாக் அப் மரணங்களை விட தற்போது குறைவு தான்' என்கிறார்.

உண்மையிலேயே, தமிழக அரசின் ஓராண்டு, 'சாதனை'கள் என்ன தெரியுமா?
*'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களை, 'தேர்வு வராது... வராது...' என்ற கோணத்தில் சிந்திக்க வைத்து, அவர்களை சரிவர தேர்வுக்கு தயாராகாமல்செய்தனர். அதனால், மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பலர் இழந்தனர் * மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும், மாநில அரசின் திட்டம் போல,'ஸ்டிக்கர்' ஒட்டுகின்றனர் * மத்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக தருவதை, மாநில அரசு தருவது போல பிலிம் காட்டுகின்றனர் * தடுப்பூசி போடும் நிலையங்களில், ஸ்டாலின் புகைப்படம் வைத்து விளம்பரம் தேடுகின்றனர்* அயோத்தியா மண்டபம் விவகாரத்தில் தலையிட்டு, நீதிமன்றத்திடம் குட்டு வாங்கினர்* தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித்து, பின், அதை நீக்கினர்.

இப்படி இவர்களின் ஓராண்டு சாதனைகளை, இல்லை இல்லை... இவர்களால் மக்கள் எதிர்கொண்ட சோதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பர்.அவற்றை எல்லாம் தாண்டி மாபெரும் புளுகை அள்ளி விடுகின்றனர். கேட்கிறவன் கேணையாய் இருந்தால், கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்வராம். அதுபோல, மக்கள் காதில் இவர்கள் பூ சுற்றுகின்றனர். சுற்றுங்க சுற்றுங்க... இன்னும் நாலு ஆண்டிற்கு சுற்றிக் கொண்டே இருங்க...!கொட்டம் தானாக அடங்கி விடும்!

ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: ஒரு திருமண வீட்டில், சிறிய குழந்தை ஒன்று தனியாக விளையாடிக் கொண்டிருந்தது. அதனுடன் மற்ற குழந்தைகள் சேர்ந்து விளையாடவில்லை. இதனால், அந்தக் குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையும், கோபமும், பொறாமையும் வந்தது. உடனே, எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்ற ஆசையில், 'ஓ' வென்று அழ ஆரம்பித்தது. எல்லாரும், 'என்ன வேண்டும்' என்று கேட்டனர். உடனே அந்தக் குழந்தை, 'ஒரு பானை வேண்டும்' என்றது; பானையை கொடுத்தனர். அதை வாங்கிய பிறகும் அழுதது. என்னவென்று பெரியவர்கள் கேட்க, 'யானை ஒன்று, இந்த பானையின் உள்ளே போக வேண்டும்' என்றது. பெரியவர்கள் சிரித்தபடியே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். அதுபோல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி., 'ராமரை தெரியாது' என்கிறார். இவரை யாரும், அரசியலில் மதிப்பது இல்லை. அதனால், அரை வேக்காடுத் தனமாகவும், தான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்ளவும் எதை எதையோ பேசுகிறார்.இதைப் போய், ஒரு வாசகர் சீரியசாக எடுத்து, ராமர், கம்பர், ராமாயணம்பற்றி இப்பகுதியில் எழுதி இருந்தார்; அது, தேவையே இல்லை. தமிழகத்தில், 60 ஆண்டுகளாக கடவுள் மறுப்புக்கொள்கையை, ஒரு பிரிவினர் பின்பற்றுகின்றனர். ஆனாலும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்யும் பொதுமக்கள் கூட்டம் குறையவில்லை.அவர்களில் யாராவது, ஜோதிமணியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்தனரா? அதுபோல, நாமும் அப்படிப்பட்டவர்களை புறந்தள்ள வேண்டும்.ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, 'கடவுள் உண்டு என்று சொன்னால் அதை நிரூபிக்க புராணங்கள், இதிகாசங்கள்என பலவற்றையும் படிக்க வேண்டும்.'கோவில்களுக்கு போக வேண்டும். கடவுள் இல்லை என்று, சொல்லி விட்டால் ஒன்றும் செய்ய வேண்டாம்; நிரூபிக்கவும் வேண்டாம்' என்றார்.அதுபோல, ஹிந்து கடவுள்கள் பற்றி விமர்சிப்போரை, கண்டு கொள்ளாமல் இருந்து விட்டாலே, அவர்களின் ஆட்டம், பாட்டம், கொட்டம் எல்லாம் தானாக அடங்கி விடும்.திருவோடு ஏந்த நேரிடும்!


வி.பத்ரி, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: இலங்கையில் நடந்த வன்முறை பற்றி, ஊடகங்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 'விரைவில் இந்தியாவும் இலங்கை போலாகி விடும்' என திருவாய் மலர்ந்திருக்கிறார். என்னே... நல்ல எண்ணம் பாருங்க! இந்தியா அமைதியாக இருப்பதும், நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதும் திருமாவுக்கு பிடிக்கவில்லை. இலங்கை போல, இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, உணவுக்கு தட்டுப்பாடு உண்டாகி, மக்கள் சோற்றுக்கு அலைய வேண்டும் என்று நினைக்கிறார் போலும். இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்கும் சேர்த்து தான், பிரதமர் மோடியின் முயற்சியால், கொரோனா தொற்றை ஒழிக்க, வெகு விரைவாக நம் நாட்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியில், வேறு ஒரு அரசு பதவியில் இருந்திருந்தால், இப்படியெல்லாம் பேச, திருமா போன்றவர்கள் உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள். மிகுந்த, 'தேசப்பற்றுள்ள' அவரைப் போன்றோர் எல்லாம், கொரோனாவுக்கு காலாவதி ஆகியிருப்பர். பிரதமர் மோடியின் புண்ணியத்தால் பிழைத்து போன, 'லெட்டர் பேடு' கட்சி தலைவர்கள் தான், தேச நலனுக்கு எதிராகவும்,பிரதமரை விமர்சித்தும்,துாற்றியும் பேட்டி அளித்து வருகின்றனர். இது போன்ற காழ்ப்புணர்ச்சி அரசியல்வாதிகளை, உலகில் வேறு எங்கும் காண முடியாது. தமிழகத்தில் தான் மலிந்து கிடக்கின்றனர். ஒரு விஷயத்தைதிருமா நினைவில் கொள்ள வேண்டும்... அவரின் ஆசைப்படி இலங்கை போன்ற நிலைமை இந்தியாவிற்கு வந்தால், திருமாவும் திருவோடு ஏந்த வேண்டியிருக்கும்; அதற்கு அவர் தயாரா?கருணாநிதி பெயர் வைப்பதில் தவறில்லை!


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தேர் தான், ஆசியாவிலேயே மிகப்பெரியது. இந்தத் தேர் பவனி வரும் தெற்கு ரத வீதிக்கு, கருணாநிதி சாலை என்று பெயர் சூட்ட திருவாரூர் நகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு, சாலைகளின் பெயர்களை தங்கள் இஷ்டம் போல மாற்றம் செய்யும் மனோ வியாதி பிடித்து விட்டது. மனுநீதி சோழனின் தேர் ஓடிய வீதிக்கு, கருணாநிதி பெயரை சூட்டுவது மகா பாவம். திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, மனுநீதி சோழனின் பெயரையே சூட்ட வேண்டும்' என்று வலியுறுத்தி, பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறார் அண்ணாமலை. கருணாநிதி பகுத்தறிவு செம்மலாக இருந்தாலும், சில நல்ல ஆன்மிக காரியங்களையும் செய்திருக்கிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை செப்பனிட்டு ஓடச் செய்தவர் அவரே. சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் இறங்கி, அதைச் சுத்தப்படுத்தியவர் கருணாநிதி என்பது பக்தர்களுக்கு தெரியும்.திருவாரூரில் படித்தவர்; காவிரி தண்ணீரை பருகி வளர்ந்தவர் என்ற பெருமை எல்லாம்கருணாநிதிக்கு உண்டு. அண்ணாதுரையை போல, திருவரங்கநாதரை பீரங்கி கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ என்று, ஏகடீயம் பேசி மகிழ்ந்தவர் அல்ல. திருவாரூர் தேரை வெற்றிகரமாக, அந்நகர ரத வீதிகளில் பவனி வரச் செய்து அழகு பார்த்தவர் கருணாநிதி என்பதால், அவரின் பெயரை திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு சூட்டுவது பஞ்சமா பாதகமாகாது. மனுநீதி சோழனின் தேர் சென்ற வீதிக்கு, அவரது பெயரைத் தான் வைக்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடம் பிடித்து போராட்டம் நடத்துவதை, திருவாரூர் மக்களே ஏற்க மாட்டார்கள். மனுநீதி சோழனின் பெயரை, தெற்கு ரத வீதிக்கு மட்டுமே வைக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? வடக்கு, மேற்கு, கிழக்கு ரத வீதிகளில், ஏதாவது ஒரு வீதிக்கு வைத்துக் கொள்ள வேண்டியது தானே? தி.மு.க., எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்று, அண்ணாமலை முடிவெடுத்து செயல்படுவது, அவருக்கு அவப்பெயரையே தேடித்தரும். திருவாரூர் மண்ணின் மைந்தர் கருணாநிதி என்பதை, அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும்.ஸ்டாலின் பொய்களை இனியும் நம்பாதீங்க!

எஸ்.செபஸ்டின், சிவகாசி,விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகி, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதை அமல்படுத்த வாய்ப்பில்லை' என, சூசகமாக தெரிவித்து விட்டார், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன். தேர்தல் நேரத்தில் எதை எதையோ சொல்லி ஆட்சியில் அமர்ந்து விட்டோம்; இனி, அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் என்ன... நிறைவேற்றாவிட்டால் என்ன... என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பது,இந்த அறிவிப்பின் வாயிலாக தெரிகிறது. அரசு ஊழியர்கள் தான், அரசின் ஆணிவேர் போன்றவர்கள். எனவே, ஆணிவேருக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால், அரசு என்ற மரத்தின் நிலை என்னவாகும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்கின்றன, அரசு ஊழியர்களின் சங்கங்கள். முந்தைய தி.மு.க., ஆட்சியில் துணை முதல்வராகவும், அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர் ஸ்டாலின். பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த முடியுமா... அதற்கு மாநில அரசின் நிதி நிலைமை ஒத்துழைக்குமா என்பது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தும், அரசு ஊழியர்களின் ஓட்டுகளைகவர்வதற்காக, தேர்தல்நேரத்தில் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். இப்போது, அவற்றை நிறைவேற்ற முடியாமல், கண்விழி பிதுங்கி நிற்கிறார். 'கெட்டிக்காரரின் பொய்யும், புரட்டும் எட்டு நாளைக்கு தான் செல்லும்...' என்ற, எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல் வரிகளை தான், ஸ்டாலின் அரசின் அறிவிப்பு நினைவுபடுத்துகிறது.அரசு ஊழியர்களும், பொதுமக்களும், இவர்களின் பொய்களை இனியாவது நம்பாமல் இருந்தால் சரி தான்.ஆசிரியர்களுக்கும் முத்திரை குத்த வேண்டும்!

கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பள்ளிகளில் மாணவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டால், தற்காலிகமாக நீக்குவோம். 'நிரந்தரமாக நீக்கினால், எதற்காக நீக்கினோம் என்பதை, மாற்றுச் சான்றிதழான, டி.சி.,யில் எழுதித் தருவோம்' என, சட்டசபையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். இது, வரவேற்கத்தக்க முடிவு என்றாலும், சிக்கல் இருக்கிறது. இவ்வாறு ரவுடி, போக்கிரி என முத்திரை குத்தப்பட்ட மாணவர்கள், வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர இயலாது.அதனால், சமூக விரோதிகளின் கைகளில் சிக்கி, கடுமையான குற்றவாளிகளாக மாறும் அபாயம் உள்ளது. இது போன்ற மாணவர்களுக்கு எடுத்த உடனே கடும் தண்டனை கொடுக்காமல், முதலில் உளவியல் நிபுணர்கள் வாயிலாக கவுன்சிலிங் கொடுத்து, நல்வழியில் திருப்ப முயற்சிக்க வேண்டும். அத்துடன், அநாகரிகமாக நடக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து, அவர்களுக்கும், ள்ளைகளை கண்டிப்புடன் வளர்ப்பதற்கான யோசனைகளை வழங்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளில் இருந்து, மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு களை நடத்த வேண்டும். பெற்றோரையும், ஆசிரியர்களையும், வயதில் மூத்தவர்களையும் மதித்து நடக்கும் பண்பை வளர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் மாணவர்களை கண்டிக்க, ஆசிரியர்கள் கையில் பிரம்பை கொடுத்தாலும் தப்பில்லை. அதேபோல, பள்ளிகளில் மாணவியரிடம் சில்மிஷங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் சான்றிதழ்களிலும், அவர்கள் அதன்பின் வேறு எங்கும் பணியில் சேர முடியாத வகையில்,'நடத்தை கெட்ட ஆசிரியர்'என்ற முத்திரையை குத்த, கல்வித்துறையும், மாநில அரசும் முன்வர வேண்டும்.அப்போது தான், சிறுமியரும், மாணவியரும், பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது தொடர்பான குற்றங்கள் குறையும். அத்துடன், அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் வேறு தொழில்களில் ஈடுபடுவதும், தடை செய்யப்பட வேண்டும். 'இருக்கிறவன் சரியாய் இருந்தால், சிரைக்கிறவன் ஒழுங்காய் சிரைப்பான்' என்ற சொலவடை உண்டு. அதனால், மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X