சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

மரணத்திற்கு பிறகு என்னதான் நடக்கிறது?

Added : மே 15, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
Question:சத்குரு எவ்வளவோ பேரிடம் கேட்டுவிட்டேன். சரியான பதில் கிடைக்கவே இல்லை... உண்மையில், மரணத்துக்குப்பின் எங்கேதான் போகிறோம்?சத்குரு:சங்கரன்பிள்ளையின் மரணம்"சங்கரன்பிள்ளை ஒருமுறை தன் நண்பரிடம் சொன்னார், செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"நண்பர்
மரணத்திற்கு பிறகு என்னதான் நடக்கிறது?

Question:சத்குரு எவ்வளவோ பேரிடம் கேட்டுவிட்டேன். சரியான பதில் கிடைக்கவே இல்லை... உண்மையில், மரணத்துக்குப்பின் எங்கேதான் போகிறோம்?

சத்குரு:
சங்கரன்பிள்ளையின் மரணம்
"சங்கரன்பிள்ளை ஒருமுறை தன் நண்பரிடம் சொன்னார், செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"
நண்பர் சொன்னார், 'நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்'.
அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன்பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது.
'கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எது முதலில் வேண்டும்?'
'ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்'.
'இங்கே கிரிக்கெட் இருக்கிறது'.
'கெட்ட செய்தி?'
'திங்கட்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!'

ஏதோ சங்கரன்பிள்ளைக்கு வருகிறது என்றவுடன் உங்களால் சிரிக்கமுடிகிறது. ஆனால் எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து தப்பிக்கமுடியாது. உங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? மூச்சு உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன மூச்சு திரும்பவும் உள்ளே வராவிட்டால், மரணம் நிகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு சுவாசத்திலும் உயிர் வெளியே போய்விட்டு உடல்கூட்டுக்குள் திரும்புகிறது. அப்படித் திரும்பும்போது, அதை ஏற்கும் நிலையில் உடல் இருந்தாக வேண்டியிருக்கிறது.
அப்படியானால், நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது என்று புரிகிறதா? உங்கள் உயிர் இங்கேதான் இருக்கிறது என்றோ, அங்கேதான் இருக்கிறது என்றோ சொல்ல முடியவில்லை என்றால், என்ன அர்த்தம்? அது எல்லை இல்லாமல் இருக்கிறது.

நம் கற்பனைத்தான். 'இது ஒரு தனிஉயிர், அது ஒரு தனிஉயிர்' என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறது. எப்படி இருந்தாலும், மரணத்தில் இருந்து தப்பிக்கமுடியாது. அப்புறம், 'எப்படி வாழ்ந்தால் என்ன?' என்று வாழப் பார்த்தால், வாழ்க்கை பலவிதமாகப் புரட்டிப் போட்டுவிடும். ஆனந்தமாக வாழ வேண்டும். ஆனந்தமாக முடியவேண்டும் என்றால், அதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாதவர்கள் உடல் கீழே விழுகையில் மட்டும்தான் இறப்பைப் பார்க்கிறார்கள். விழிப்புணர்வோடு இருப்பவர்கள் வாழும் ஒவ்வொரு கணத்திலும் மரணத்தையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படி மரணத்தை வாழ்வின் ஓர் அங்கமாகக் கவனித்துவிட்டால், அப்புறம் மரணத்தால், நம்மைத் தளையிட முடியாது.

ஆனால் இந்தப் புரிதல் இல்லாமல், மரணமற்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற வெறி புராண காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆயிரம் நிபந்தனைகள் போட்டு ஹிரண்யகசிபு வரம் வாங்கினான். அவன் உயிரை எடுப்பதற்கு கடவுளே தந்திரமாக மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது.

பஞ்சதந்திரத்தில் ஒரு கதை இருக்கிறது. குரங்கு ஒன்று குடுவையில் இருக்கும் கடலைகளை அள்ளி எடுக்கப் பார்த்தது. கை நிறையக் கடலைகளை எடுத்துவிட்டதால், குடுவையில் சிறு கழுத்துப் பகுதியைத் தாண்டி கையை வெளியே எடுக்க முடியவில்லை. கடலைகளை விட்டால்தான் கை வெளியே வரும். ஆனால், ஆசையோடு அள்ளிய கடலைகளைவிட குரங்குக்கு மனம் வரவில்லை. கையை வெளியே எடுக்கவும் முடியாமல், கடலைகளை விடவும் முடியாமல் குரங்கு அல்லாடியதைப் போல்தான் அல்லாடுகிறது மரணத்தை மறுக்க நினைக்கும் மனது.

மரணம் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும்?
ஓர் இளைஞன் இமயத்தில் இருந்த யோகிகளைச் சந்தித்து சில அபூர்வ சக்திகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பினான். தன் தெருவில் முக்காடு போட்டபடி, முகமே இல்லாத ஓர் உருவம் தன் வீட்டுக்குள் நுழையப் பார்ப்பதைக் கவனித்து அதை வழிமறித்தான். வழிவிடு, நான் மரணதேவன். உன் தாயின் மரண நாள் வந்துவிட்டது என்றது அந்த உருவம். இளைஞன் தன் சக்தியைப் பிரயோகித்து மரணதேவனைப் பிடித்து தன் கமண்டலத்தில் அடைத்தான். கமண்டலத்தைப் பூமியில் புதைத்துவிட்டு, வீட்டுக்குப் போனான்.

அவனுடைய அம்மாவுக்குப் பல வருடங்கள் கழித்து மகனைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சி. அவனுக்குப் பிடித்த கோழிக்கறியைச் சமைத்துப்போட விரும்பினாள். கோழியைப் பிடித்துக் கழுத்தை வெட்டினாள். எத்தனை தடவை வெட்டினாலும், வெட்டுப்பட்ட கழுத்து மறுபடி சேர்ந்துகொண்டது. கோழி சாக மறுத்தது. இது என்னடா அதிசயம், ஒருவேளை மகன் பூரண சைவத்திற்கு மாறிவிட்டானோ என்று குழப்பம் வந்தது. தோட்டத்திற்குப் போய் கீரையைப் பிடுங்கினாள், கீரை வரவில்லை. காய்களைப் பறித்தாள், அவை மறுபடி செடியில் போய் ஒட்டிக்கொண்டன. அம்மா மிரண்டுபோய் மகனிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள்.

'ஏதோ மந்திர தந்திரம் எல்லாம் கற்று வந்திருக்கிறாயே! என்னடா செய்தாய்?' என்று கேட்டாள். மகன் அவளைத் தேடிவந்த மரண தேவனைப் பிடித்து புதைத்துவிட்டதைச் சொன்னான்.
'வேண்டாமடா இந்த விபரீதம்! முதலில் அவனை விடுவித்துவிடு. அவனுடைய வேலையை அவன் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம். இல்லை என்றால், உலகத்தில் யாரும் உண்ண முடியாது. எதுவும் செய்ய முடியாது' என்றாள், அவன் அம்மா.

மரணத்தை நிறுத்தினால், அப்படித்தான் ஆகிவிடும். ஏனென்றால், உயிர் என்பதோ, மரணம் என்பதோ தனித்தனியாக வரவில்லை. இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கின்றன. இதை நீக்கினால், அது நடக்காது. அதை நீக்கினால், இது நடக்காது.
ஓர் அறைக்குள் நீங்கள் உள்ளே போகமுடியும், வெளியேயும் வரமுடியும் என்றால், அதை உங்கள் குடியிருப்பு என்கிறீர்கள். உள்ளே போனீர்கள், வெளியே வரமுடியவில்லை என்றால், அது அரண்மனையாகவே இருந்தாலும், அதைச் சிறை என்கிறீர்கள். ஆக வெளியே வந்துவிட்டு உள்ளே போகமுடியாது என்றாலும் பிரச்சினைதான். இங்கே வந்தால் இங்கே சிக்கிப்போவீர்கள். அங்கே போனால், அங்கே சிக்கிவிடுவீர்கள் என்றால், அதைச் சுதந்திரம் என்று எப்படிச் சொல்லமுடியும்? வாழ்ந்தாலும் ஒருவிதச் சிறை. செத்தாலும் ஒருவிதச் சிறை என்பதை எப்போது நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது இதைத்தாண்டிப் போகவேண்டும் என்ற ஆர்வம் நமக்கு வந்துவிடும். உயிரின் தன்மையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் துவங்கிவிடும். முக்திக்கான முதல் அடியெடுத்து வைத்துவிடுவோம்.

விழிப்புணர்வோடு இருந்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியில் பிறப்பு நிகழ்வதும், இன்னொரு பகுதியில் மரணம் நிகழ்வதையும் பார்க்கமுடியும். இதை முழுமையாக உணர்ந்து, அடுத்த கணத்தில் உயிர் பிரியும் என்று தெரிந்தாலும் ஒரு மனிதன் ஆனந்தமாக இருக்கமுடிந்தால், அதுவே அவன் மேன்மையான நிலையை எட்டிவிட்டதற்கு அடையாளம்.
மரணத்துக்குப்பின் எங்கே போவோம் என்ற கேள்வி இன்னும் உங்கள் மனதில் தொக்கி நின்றால், அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வேன்".

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
21-மே-202217:00:16 IST Report Abuse
thonipuramVijay .....
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
21-மே-202211:31:15 IST Report Abuse
Sidhaarth சக்கி போயி பாத்துட்டு வந்து சொல்றாரு கேளுங்கப்பா
Rate this:
venkat - CHENNAI,இந்தியா
26-மே-202214:40:19 IST Report Abuse
venkatநீங்க பார்த்துவிட்டு சொல்லவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X