ரோம்: தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்தை சேர்த்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிகளுக்கும் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார். புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் இவர் ஆவார். புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், குமரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிஷப்புகள், பங்கு தந்தைகள், அமைச்சர்கள் தங்கராஜ், செஞ்சி மஸ்தான், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு திருப்பலி
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் கோட்டாறு, குழித்துறை மறைமாவட்டங்களில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, பிராத்தனைகள் நடைபெற்றன. ஆரல்வாய்மொழி காற்றாடிமலையில் தமிழகத்தின் முதல் புனிதர் தேவசகாயம் என்னும் நிலையை போற்றி நன்றி கொண்டாட்டம் நடக்கிறது. இதையொட்டி ஜூன் 5ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழாவும் நடக்கிறது.

தேவசகாயத்தின் வரலாறு
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் 1712ல் பிறந்த இவரின் இயற்பெயர் நீலகண்டன். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை கற்ற நீலகண்டன், சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், அடி முறை உள்ளிட்ட கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். போர் பயிற்சியும் பெற்ற இவர், திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மாவின் படையில் பணியாற்றினார். நீலகண்டனுக்கு திருமணம் முடிந்த பின்னர், அவரை அரசவை அலுவலராக நியமித்தார் அரசர்.
டச்சு படை தளபதி டிலனாய் என்பவரை மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் போரில் சிறைபிடித்தார். கத்தோலிக்கரான டிலனாய் கைதியாக இருந்தாலும், மன்னரின் அன்பை பெற்றதால், அவரது படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார். இதனால், நீலகண்டனுக்கும், டிலனாய்க்கும் பழக்கம் ஏற்பட்டது. நீலகண்டனுக்கு, டிலனாய் இயேசு போதனைகளை ட கூறியதால், இதனால், மனமாற்றமடைந்த நீலகண்டன் 1745ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தேவசகாயம் என அழைக்கப்பட்டார்.
மதம் மாறியதால், மன்னரின் கோபத்திற்கு தேவசகாயம் ஆளானார். அவர் மீது தேச துரோகம் மற்றும் உளவுபார்த்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து விலக்கப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். 1752 ல் தேசகாயம், ஆரல்வாய்மொழி காட்டில் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் பாறையில் உருட்டிவிடப்பட்டது. அவரது உடலில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடித்து சேகரித்த கிறிஸ்தவர்கள், கோட்டார் மறைமாவட்டத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் அடக்கம் செய்தனர். இதையடுத்து தேவசகாயத்தின் கதை கத்தோலிக்கர் மத்தியில் பரவியது.
தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் இன்று வழங்கப்பட்டதை முன்னிட்டு, செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று கலாசார நிகழ்ச்சி நடந்தது. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி, அருட்சகோதரிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE